திருவள்ளூரில் இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் : 2 பேர் கைது

Loading

திருவள்ளூர் நவ 09 :

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து நாள் தோறும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.  சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி போன்ற பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர்.இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இது காலம் காலமாக தொடர்கிறது.

இந்நிலையில் கடந்த 3-ந் தேதி திருவள்ளூர் அடுத்த  செஞ்சி பானம்பாக்கம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மகன் கிருஷ்ணகுமார் (18). இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த 3ம் தேதி கிருஷ்ணகுமார் கல்லூரிக்கு செல்வதற்காக புறநகர் மின்சார ரயிலில் சென்றார்.

அப்போது திருவள்ளூருக்கும் – புட்லூருக்கும் இடையே ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அதே ரயிலில் வந்த மாநில கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் திருவள்ளூர் பாடசாலை , பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ் (18)  போளிவாக்கம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ்(18) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.

பின்னர் ஜல்லிக்கற்களை  கொண்டு அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கிருஷ்ணகுமார் திருவள்ளூர் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவர்களான சந்தோஷ், ஹரிஷ் ஆகிய 2 பேரை  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *