தனியார் நிறுவன நிர்வாகியிடம் கார், பணம் திருட்டு
புதுச்சேரி
பெங்களூரு டஸ்கர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ஷேக் (வயது 43). தனியார் கார் கம்பெனியின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.. இவர் தனது நிறுவனத்துக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை பெறுவதற்காக விளம்பரம் செய்திருந்தார். இதன் மூலமாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த மைக்கேல், ஷேக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிங்கப்பூரில் இருந்து சில முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், இதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 20-ந் தேதி ஷேக்கை, மைக்கேல் புதுவை சுப்பையா சாலையில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம், சொகுசு கார், மடிக்கணினி ஆகியவற்றை திருடிவிட்டு மாயமானார். இது குறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.