கந்தரவகோட்டை ஒன்றியத்தில் கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் இல்லம் தேடி கல்வித் திட்டம்; பெற்றோர்கள் மகிழ்ச்சி
கந்தரவகோட்டை, மார்ச் 16-
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ் அவர்களின் ஆலோசனையின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின்படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆத்தங்கரைவிடுதி, மேலவாண்டான்விடுதி மற்றும் கீழவாண்டான்விடுதி குடியிருப்புகளில் செயல்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் அ.ரகமதுல்லா மற்றும் இ.தங்கராசு ஆகியோர் பார்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கினர்.
தன்னார்வலர்கள் ஆத்தங்கரைவிடுதி சௌந்தர்யா, சூசை வேணி, கௌரி கீழவாண்டான்விடுதி சிவப்பிரியா, கவிதா மற்றும் மேலவாண்டான் விடுதி ஜெயராணி, ஹேமா ஆகியோர் ஆடல், பாடல், விடுகதைகள் மற்றும் விளையாட்டுகள் போன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் சூழலை உருவாக்கியுள்ளனர் எனவே தன்னார்வலர்களை பாராட்டியதுடன் பள்ளியில் உள்ள கற்றல்-கற்பித்தல் வளங்களை அவர்கள் தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் பயன்படுத்திக் கொள்ளவும், பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களில் பங்கேற்று பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் உதவிடவும் ஆலோசனை வழங்கினார்கள்.. இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்கள் பள்ளி முடிந்து மாலை நேரத்திலும் மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபடுவது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.