முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
கோவை, மார்ச் 15-
எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக இருந்தபோது தனது பதவியை தவறாக பயன்படுத்தி தனக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சலுகை அடிப்படையில் டெண்டர் வழங்கியதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 57 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோன்று கேரளாவில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. கடந்த 27.4.2016 முதல் 15.3.2021 வரையிலான கால கட்டத்தில் மட்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக கோவை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே நேற்றைய சோதனை நடந்தது.
கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில், எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று காலை இந்த வீட்டிற்கு தென்காசி மாவட்ட டி.எஸ்.பி மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர் வந்தனர். அவர்கள் வீட்டின் நுழைவு வாயில் மற்றும் கதவுகளை அடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.
பின்னர் அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சோதனையின்போது எஸ்.பி.வேலுமணி வீட்டில் இருந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் தகவலை அறிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்து போலீசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பாதுகாப்பு காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. இதேபோன்று தொண்டாமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடந்தது. சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் வீடு, அவர் நடத்தி வரும் அறக்கட்டளை அலுவலகம் மற்றும் கடையிலும் சோதனை நடந்தது.
எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதப்படும் வடவள்ளி மகாராணி அவென்யூவில் வசித்து வரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரும் என்ஜினீயருமான சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் கோவை சேரன் மாநகரில் உள்ள சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெய ராம், வடவள்ளியில் உள்ள சந்திரபிரகாஷ், எஸ்.பி. வேலுமணியின் உதவியாளரான சந்தோஷ் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
எட்டிமடையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ சண்முகம் வீடு, சூலூர் முதலி பாளையத்தில் உள்ள சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கந்தவேல் வீடு, அன்னூரில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா வீடு உள்பட எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான உறவினர்கள், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் மட்டும் மொத்தம் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடந்து வரும் அனைத்து இடங்களிலும், யாரும் உள்ளே நுழையாதவாறு வீட்டின் கதவுகள், கேட்டுகள் அனைத்தும் மூடப்பட்டன. வீட்டில் இருந்த யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்ப டவில்லை. அவர்களிடம் இருந்த செல்போன் உள்ளிட்டவற்றையும் போலீசார் வாங்கி வைத்து கொண்டனர்.
இதேபோல் சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் வீடு உள்பட 4 இடங்களிலும் நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
சென்னையில் 8 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு மஹா கணபதி நகை கடையிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல் கேரளாவில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு சோதனை அரசியல் அரங்கத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், அவரது மனைவி ஹேமலதா, என்ஜினீயர் சந்திரசேகர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்ப ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.