பட்ஜெட் 2022-23: தற்சார்புள்ள வடகிழக்கு மாநிலங்களை நோக்கிய மற்றொரு வலுவான முன்னெடுப்பு
வடகிழக்கு பிராந்தியத்தின் அஷ்டலட்சுமி (எட்டு) மாநிலங்கள் பட்ஜெட் 2022-23-ல் இருந்து ஏராளமான பயன்களை பெறவிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. இந்தியாவின் வளர்ச்சி எந்திரமாகவும், ஆசியானுக்கு நுழைவாயிலாகவும் உள்ள இந்த 8 மாநிலங்கள் தற்சார்பு இந்தியாவுக்கான அரசின் வளர்ச்சி திட்டத்தின் மையமாக விளங்குகின்றன. இந்த பிராந்தியத்தில் தற்சார்பு பொருளாதார நிர்வாகத்தை அமைப்பதற்கான மேம்பாட்டு முயற்சிகளுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும் இந்த பட்ஜெட் வளர்ச்சியின் பாதையில் மேலும் பிரகாசமாக்கும்.
2014-க்கு பின் பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை நோக்கி இயக்க ரீதியாக பணியாற்றி வருவதோடு இவற்றின் மீது எப்போதும் தனி கவனம் செலுத்தி வருகிறார். 75 ஆண்டுகளில் மணிப்பூருக்கு முதலாவது சரக்கு ரயில் போக்குவரத்து, முதல் முறையாக ரயில்வே வரைப்படத்தில் அருணாச்சலப் பிரதேசமும், மேகாலயாவும் சேர்க்கப்பட்டது. மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான பாலம் அமைக்கப்பட்டது. சிக்கிமில் முதலாவது விமான நிலையத்தை தொடங்கி வைத்தது போன்றவை பிரதமரின் தொலைநோக்கு பார்வை உள்ள தலைமைத்துவத்தின் வளர்ச்சி செயல்பாடுகளாகும்.
இந்த செயல்பாட்டுக்கு பட்ஜெட் 2022-23 கூடுதல் ஊக்கத்தைத் தந்துள்ளது. 2014-15-ல் வடகிழக்கு பிராந்தியத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.36,108 கோடி என்பதில் இருந்து 2022-23-ல் ரூ.76,040.07 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட 12 சதவீதம் அதிகமாகும். இதில் 15 சதவீதத்திற்கும் அதிகமான ஒதுக்கீடு நெடுஞ்சாலைகள் தகவல் வசதிகள், ரயில்வே, விமான நிலையங்கள் போன்றவற்றுக்காக உள்ளது.
சமீபத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதமரின் மேம்பாட்டு முன் முயற்சி என்ற புதிய திட்டம் ரூ.1500 கோடி ஒதுக்கீட்டுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தின் துரிதமான வளர்ச்சிப் பயணத்திற்கு இது மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பாகும்.
இந்த பட்ஜெட்டில் பசுமைப் பொருளாதாரம் குறித்து அளிக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாக பர்வதமாலா இழுவை ரயில் பாதை மேம்பாட்டுத் திட்டம் புரட்சிகரமான போக்குவரத்து முறையாக இருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், வடகிழக்கின் சிக்கலான புவியியலுக்கு இணக்கமானதாகவும் இருக்கும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இது மேலும் ஒரு வழியாக அமையும்.
பல லட்சம் மக்கள் தொகையை கொண்ட வடகிழக்கின் ஏராளமான இயற்கை வளங்களுக்காக எட்டு மாநிலங்களையும் ஒருங்கிணைக்கும் அஷ்டலட்சுமி என்ற பெயரை பிரதமர் மிகச்சரியாகவே சூட்டியுள்ளார். பட்ஜெட் 2022-23-ஐ முற்போக்கானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் மாற்றுவதற்கான காலமாக நம் எல்லோருக்கும் உள்ளது.
-ஜி.கிஷண் ரெட்டி,
மத்திய அமைச்சர்,
வடகிழக்கு பிராந்திய மேம்பாடு,
சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை.