உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி.. டிடிவி தினகரன் அதிரடி
சென்னை: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? கவலை இருக்கா?.. திமுகவிடம் எடப்பாடி கேட்ட அதே கேள்வி.. தினகரன் நறுக்
ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்துப் போட்டியிடவுள்ளது என்று தெரிவித்தார். மேலும், கொரோனா பரவல் காரணமாகத் தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனித்து போட்டி
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. வேட்பாளர் விவரம் இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். ஒமிக்ரான் பரவல் நேரத்தில் தேர்தலை நடைபெறுகிறது. இதனால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் உண்டாகிறது. தேர்தலை ஒரு மாதம் தள்ளி வைத்திருக்கலாம்.
தூங்க முடியாது
6 மாதம் கழித்து இப்போதுதான் தெரிகிறது திமுகவின் உண்மை முகம். அதற்கு பொங்கல் தொகுப்பு உதாரணமாக அமையும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தோற்று இருந்தாலும் மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம். தோல்வி அடைந்தால் வீட்டில் படுத்துத் தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அரசியல் வியாபாரம் இல்லை.
கருத்து
அதிமுக குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து சரியானது. பேசிய வார்த்தைகள் தான் தவறானது. அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள். அதைக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும். அத்தைதான் நயினார் நாகேந்திரன் சொல்லியுள்ளார். ஆளுங்கட்சியின் முறைகேடுகளை மீறித் தேர்தலில் வெற்றி பெற முயல்வோம். அரியலூர் மாணவி விவகாரத்தில் மாணவியின் அடையாளங்களைப் பயன்படுத்தியது சட்டப்படி தவறு எனில் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்று அவர் தெரிவித்தார்.