கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி கோவிலில் உண்டியலை உடைத்து நகை பணம் திருட்டு
சிவகங்கை ஜூலை 21
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகத்திலுள்ள அனைவரும் உறவினர்களே என்று பாடிய பூங்குன்றனார் பிறந்த “பூங்குன்றன் நாடு” என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் அருள்மிகு பூங்குன்றநாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது.
இச்சுற்றுப் பகுதிகளிலுள்ள 24½ கிராமங்களுக்கு சொந்தமாகத் திகழ்ந்துவரும் இக்கோவிலில் அம்மன் வடக்கு முகமாக அருள்பாலிப்பது சிறப்பு.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இக்கோவில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடியிருந்த நிலையில் தற்போது
அரசு அறிவித்திருந்த தளர்வுகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு
கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரவு கோவிலில் பூஜைநடத்திவிட்டு இரவு 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி பொன்னழகு சென்றுள்ளார். வழக்கம்போல் அதிகாலையில் கோவிலை திறந்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக்கிடந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பூசாரி பொன்னழகு
கோவில் அறங்காவலருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக கோவில் அறங்காவலர் கண்டவராயன்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
கோவிலுக்கு விரைந்துவந்த சார்பு ஆய்வாளர் சேதுராஜ் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
முதற்கட்ட விசாரணையில் கோவிலின் பின்கதவின் பூட்டை ஆக்ஸாபிளேடால் அறுத்து உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து
மாவட்ட கைரேகை நிபுணர்கள் வருகைதந்து உடைக்கப்பட்ட கோவில் உண்டியலை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும் கோவில் உண்டியல் கடந்த 2 ஆண்டுகளாக திறக்கப் படவில்லை என்றும், 24½ கிராம மக்களும் வந்து வழிபடும் இக்கோவிலில் நேர்த்திக்கடனாக திருமணம் நடைபெற வேண்டி தங்கத்தில் தாலி, வெள்ளியில் கண், கும்பம் போன்ற நகைகளையும் இக்கோவிலில் செலுத்துவார்கள்.
அதனால் கண்டிப்பாக உண்டியலில் நகைகள் பணம் அதிகமாக இருக்கும் என்றும்
திருடுபோய் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.