பாலியல் தொந்தரவு: தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது மேலும் 7 வீராங்கனைகள் புகார்
சென்னை:
விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் தடகள பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தடகள விளையாட்டு வீராங்கனைகள் சமூகவலைதளத்தில் புகார்கள் தெரிவித்திருந்தனர். புகாருக்கு உள்ளான நாகராஜன் தமிழ்நாடு பிரைம் ஸ்போட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை பாரிமுனையில் நடத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இவர் சுங்கத்துறையில் உதவி ஆணையராகவும் வேலை செய்து வருகிறார். நாகராஜன் தமிழ்நாடு பிரைம் ஸ்போட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய விளையாட்டு திறமை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இங்கு பயிற்சிபெற்ற வீராங்கனைகள் மாநில, தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், நாகராஜன் பயிற்சியின் போது தடகள விளையாட்டு மாணவிகள்-வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், வீராங்களின் உடலை அத்துமீறி தொடுவது உள்ளிட்ட பாலியல் தொல்லைகளை அளித்துவந்ததாக சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன.
இதனை தொடர்ந்து தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்போது மேலும் ஏழு வீராங்கனைகள் புகார் கூறி உள்ளனர். அவர்களில் இந்திய வீராங்கனைகளும் அடங்குவர்.
மேலும் துஷ்பிரயோகம் பல ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு மாஜிஸ்திரேட் முன் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாகராஜனுக்கு எதிராக இதுபோன்ற ஏழு கூடுதல் புகார்களை நாங்கள் பெற்றுள்ளோம்” என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு உறுதிப்படுத்தி உள்ளார்.
ஏழு பேரில் ஒரு வீராங்கனை நாகராஜன் தனது 13 வயதில் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார் என்றும் இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நீடித்ததாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.