திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் : பாமக மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தினேஷ்குமார் கோரிக்கை
திருவள்ளூர் ஜூன் 29 : திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் டி.தேசிங்கு முன்னிலை வகித்தனர். அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் பேசியதாவது :
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் பொழுது தான் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் குறைபாடு உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.எனவே அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறிய பல்நோக்கு மருத்துவமனைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.அவ்வாறு ஆரம்ப சுகாதார நிலையங்களை சிறிய பல்நோக்கு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தினால் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் 10 முதல் 15 கிலோ மீட்டர் வரை சென்று மருத்துவம் பார்த்துக் கொள்வதையும், உயிரிழப்பையும் தவிர்ப்பதோடு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள்,ஆக்சிஜன் குறைபாடு உள்ளிட்டவைகளின் பற்றாக்குறையும் ஏற்படாது என்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளரும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான தினேஷ்குமார் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இப்பகுதிகளில் இறப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு போதிய இடுகாடு மற்றும் சுடுகாடு வசதி இல்லை.சில இடங்களில் அதற்கான சாலை வசதியும் இல்லாமல் வயல்வெளி வழியாக கொண்டு செல்லும் அவல நிலை தான் உள்ளது.திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் தான் மின் தகன மேடை உள்ளது.எனவே பொதுமக்களின் இந்த துயரத்தை போக்க திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் மின் தகன மேடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் சரசுவதி,சிவசங்கரி, டி.தென்னவன் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டார்கள். இறுதியில் மாவட்ட ஊராட்சி அரசு செயலர் கென்னடி பூபாலராயன் நன்றி கூறினார்.