திருவள்ளூரில் கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் : பால்வளத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திறந்து வைத்தனர்
திருவள்ளூர் ஜூன் 09 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக 80 படுக்கைகளை கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தினை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு
நடவடிக்கைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1000 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில்
தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மிக அதிகபட்சமாக ஒரு நாளில் 2000 நபர்களுக்கு நோய்த்தொற்று இருந்த நிலையில் தற்போது; 400 நபர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது. இன்றைய அளவில் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 3721 மட்டுமே உள்ளது. நோய்த்தொற்று சதவீதம்
23 சதவீதம் என்ற நிலையில் இருந்து தற்போது 6 சதவீதம் என்ற நிலையில் குறைந்து வருகிறது.. அதாவது 100 நபர்கள் பரிசோதிக்கப்பட்டால் அவர்களில் 6 நபர்களுக்கு மட்டுமே நோய்த்தொற்று உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கென்று 1254 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 714 ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளன. இதில் 412 படுக்கைகள் காலியாக உள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் தேவைப்படும் படுக்கை வசதிகள் கூடுதலாக்க திருவள்ளூர் அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் 80 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் 60 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 272 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.
அயப்பாக்கம் அம்மா திருமண மண்டபத்தில் 155 படுக்கைகளும் பாடியநல்லூர் ஊராட்சியில் 100 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட்டு கூடுதலாக திருத்தணி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும் பூவிருந்தவல்லி சுந்தர் திருமண மண்டபம் 150 படுக்கைகளும்ஆவடியில் 150 படுக்கைகளும் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் இந்த முழு ஊரடங்கு கால கட்டத்தில் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.அனாமிகா மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அரசி ஸ்ரீவத்சன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.ராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.