சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சி
சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சி
–துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் துவக்கி வைத்தார்
சென்னை, மார்ச் 19, 2021
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு விழா வரும் 15.8.2021 அன்று தொடங்கி 15.8.2022 வரை நடைபெறவுள்ளது. அதையொட்டி இந்திய அரசு 75 வாரங்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தி உள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் சுதந்திர இந்தியாவின் வைர விழா புகைப்படக் கண்காட்சியை அமைத்துள்ளன.
இன்று (19.3.2021) முற்பகல் கண்காட்சியைத் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் துவக்கி வைத்தார்.
துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் டாக்டர் சி.சந்திரமெளலி மற்றும் டாக்டர் ஏ.பி.மகேஸ்வரி, தலைமைச் செயலாளர் திரு அஸ்வனி குமார், ஆளுநரின் தனிச்செயலாளரும் தகவல் மற்றும் விளம்பரத்துறையின் செயலாளருமான திரு.எஸ்.டி.சுந்தரேசன் மற்றும் கலை & பண்பாட்டுத் துறைச் செயலாளர் திரு.ஏ.நெடுஞ்செழியன் ஆகியோரும் இந்தத் துவக்கவிழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.மா.அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றி விருந்தினர்களுக்கு காந்தி நூல்களைப் பரிசாக வழங்கினார்.
கண்காட்சியைத் துவக்கிவைத்த துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் அங்கு வைக்கப்பட்டு இருந்த காந்தி சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். கண்காட்சிக்கு வருகின்ற பார்வையாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
நிறைவில் புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் நன்றி கூறினார்.
இந்தக் கண்காட்சியில் காந்தி, நேதாஜி, வல்லபாய் படேல், நேரு போன்ற விடுதலைப் போராட்ட தலைவர்களின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (21.3.20210) வரை காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இலவசமாக இந்தக் கண்காட்சியைப் பார்வையிடலாம்.