திருவள்ளூரில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி : மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவிகித வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பா.பொன்னையா வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை இந்த பேரணியின் போது கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடமும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களையும் ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.
இதில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன்,மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.