செங்கலம் கிராமத்தில் வறட்சி தாங்கும் நெல் சாகுபடி குறித்து வேளாண் வல்லுநர்கள் ஆலோசனை :
திருவள்ளுர் பிப் 08 : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நீர் நுட்ப மையம் மற்றும் திருவள்ளூர் அடுத்த திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து; நீர் வள நில வளத் திட்டத்தை திருத்தணி மற்றும் ஆர். கே. பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் வறட்சி தாங்கக்கூடிய நெல் இரகங்கள் மற்றும் மேலாண்மை முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி ஆர். கே. பேட்டை வட்டாரம் செங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் நீர் வள நில வளத் திட்டத்தின் நோக்கங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் செயல் திட்டங்கள் மற்றும் நீர் சிக்கனத்தின் அவசியம் குறித்து இணைப் பேராசிரியர் இரா.மணிமேகலை விளக்கினார்.
வறட்சி தாங்கி உயர் விளைச்சல் தரும் நெல் இரகங்களான ஆடுதுறை 45, பரமக்குடி 3, அண்ணா 4, டி.கே.எம். 9 மற்றும் கோ 53 ஆகிய நெல் இரகங்கள் மற்றும் அவற்றின் குணாதிசியங்கள் குறித்தும் உதவிப் பேராசிரியர் ப. யோகமீனாட்சி எடுத்துரைத்தார்.
நெல்லில் வறட்சி தாங்கும் தொழில்நுட்பங்களான விதை கடினப்படுத்துதல், வறட்சி நிலவும் காலகட்டங்களில் 1 சதவிகித பி.பி.எ்ப் .எம் அல்லது பொட்டாஷ் கரைசல் தெளித்தல் குறித்து விதைநுட்பவியல் உதவிப் பேராசிரியர் கோ. மணி கால நிலை மாற்றம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு சார்ந்த சாகுபடி முறைகள், வானிலை அறிவிப்பு செயலிகளான மேகதூத் மற்றும் தாமினி ஆகியவை மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்தும் சி. அருள்பிரசாத் விரிவாக எடுத்துரைத்தனர். விவசாயிகளுக்கு இடு பொருட்களும் பயிற்சி கையேடுகளும் வழங்கப்படடன. பயிற்சியில் 65 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.