அவண எழுத்தர்கள் நடத்தும் போராட்டத்திற்குFAIRA ஆதரவு

Loading

மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு FAIRA முழு ஆதரவு

பதிவுத்துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்! ₹67.20 கோடி ஒப்பந்தத்திற்கு மாற்றாக அரசின் நேரடி நிர்வாகத்தில் நவீன பதிவுமையங்கள் உருவாக்க வேண்டும் – டாக்டர் ஹென்றி வலியுறுத்தல்!

தமிழ்நாடு பதிவுத்துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில், அரசின் முக்கியமான பொதுச் சேவைகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சிகளுக்கு எதிராகவும், ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொடர் சட்டப் போராட்டங்கள் மற்றும் ஜனநாயக அறவழிப் போராட்டங்களுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தனது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளது.

FAIRA-வின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், மக்கள் நலன் சார்ந்த நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், அவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

₹67.20 கோடி ஒப்பந்தம் – அரசின் வெளிப்படைத்தன்மை அவசியம்!

தமிழ்நாடு பதிவுத்துறையில் ஐந்து மாதிரி பதிவுமையங்களை அமைப்பதற்காக ₹67.20 கோடி மதிப்பிலான தனியார் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினால் ஏற்படக்கூடிய மொத்தச் செலவு எவ்வளவு? அதன் நீண்டகாலப் பராமரிப்புச் செலவு என்ன? மென்பொருள் கட்டுப்பாடு மற்றும் பொதுமக்களின் சொத்து ஆவணங்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.

ஐந்து மாதிரி மையங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவதாகக் கூறப்படும் நிலையில், அதே நிதியை அரசின் சொந்தப் பதிவாளர் அலுவலகங்களையும் கட்டமைப்புகளையும் நவீனப்படுத்துவதற்குப் பயன்படுத்த முடியாதா என்பதே FAIRA எழுப்பும் முக்கியமான கேள்வியாகும்.

தனியார் ஒப்பந்தங்களுக்குப் பதிலாக அரசின் நேரடி நிர்வாகம் வேண்டும்!

பதிவுத்துறை என்பது பொதுமக்களின் நிலம், வீடு உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் உரிமைப் பரிமாற்றத்தையும் சட்டப்பூர்வ ஆவணங்களையும் பாதுகாக்கும் மிக முக்கியமான அரசுத் துறையாகும்.

எனவே, இத்துறையின் நிர்வாக அதிகாரம், மென்பொருள் கட்டுப்பாடு, டிஜிட்டல் தரவுகள் மற்றும் பொதுமக்களின் சொத்து ஆவணங்களின் பாதுகாப்பு ஆகியவை முழுமையாக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு அதிக மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்குவதற்குப் பதிலாக, அரசுக்குச் சொந்தமான பதிவாளர் அலுவலகக் கட்டிடங்களை மேம்படுத்தி, நவீன கணினி வசதிகள், பாதுகாப்பான சர்வர்கள், இணைய வசதிகள், பொதுமக்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்!

பதிவுத்துறையின் நவீனமயமாக்கல் என்பது தனியார் நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்பாக மட்டும் அமையக் கூடாது. தமிழகத்தின் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டமாகவும் அமைய வேண்டும்.

கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல் மற்றும் தரவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் படித்த இளைஞர்களைத் தகுதியின் அடிப்படையில் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் நியமிக்க வேண்டும். தேவைக்கேற்ப வெளிப்படையான ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்பப் பணியிடங்களையும் உருவாக்கலாம்.

இதன்மூலம் அரசின் நிர்வாகக் கட்டுப்பாடு பாதுகாக்கப்படுவதுடன், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

பதிவுத்துறையைச் சார்ந்து பல்லாயிரக்கணக்கான ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் தொழில்முறைப் பணியாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

புதிய தொழில்நுட்பத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது இவர்களின் அனுபவம், தொழில் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அரசு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

அவர்களின் கருத்துகளைக் கேட்டறியாமல் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் பல்வேறு சமூக மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும்.

FAIRA-வின் முக்கியமான வலியுறுத்தல்!

1. பதிவுத்துறையின் முக்கியச் சேவைகளைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

2. ₹67.20 கோடி மதிப்பிலான ஐந்து மாதிரி பதிவுமைய ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும்.

3. அரசின் சொந்தக் கட்டிடங்கள் மற்றும் பதிவுமையங்களை நவீனப்படுத்த வேண்டும்.

4. படித்த தமிழக இளைஞர்களுக்குப் புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

5. ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தையும் தொழில் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

6. பொதுமக்களின் சொத்து ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகளின் பாதுகாப்பை அரசே உறுதிப்படுத்த வேண்டும்.

7. சம்பந்தப்பட்ட அனைத்துத் தொழில்முறை அமைப்புகளையும் அழைத்து மாநில அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

நவீனமயமாக்கலுக்கு ஆதரவு! தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு!

தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பதிவுத்துறையின் நவீனமயமாக்கலுக்கும் FAIRA ஒருபோதும் எதிரானதல்ல. ஆனால், நவீனமயமாக்கல் என்ற பெயரில் அரசின் நிர்வாக அதிகாரமும், பொதுமக்களின் சொத்து ஆவணங்களும், தொழில்முறைப் பிரிவினரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசின் பொதுச் சேவைகள் மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்; தனியார் நிறுவனங்களின் வணிக நலன்களுக்காக அல்ல என்பதே FAIRA-வின் உறுதியான நிலைப்பாடாகும்.

எனவே, மாநிலம் முழுவதும் ஆவண எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் அனைத்து ஜனநாயக அறவழிப் போராட்டங்களுக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவையும் ஒற்றுமையையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என FAIRA சார்பில் வலியுறுத்தப்படுகிறது.

ஆவண எழுத்தர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்!வழக்கறிஞர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்!

பதிவுத்துறை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் தொடர்ந்து செயல்பட வேண்டும்!நவீனமயமாக்கல் வேண்டும்! தனியார் மயமாக்கல் வேண்டாம்! மக்கள் நலனே முதன்மை!என்று FAIRA நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் தெரிவித்துள்ளார்.

0Shares