கோவை அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
![]()
கோவையில், அரசு பள்ளி மாணவர்கள் சாதனை, 35 கி.மீ. உயரத்தில் பறந்த அறிவியல் ஆய்வுக் கருவி, 11 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 55 மாணவர்கள் பங்கேற்று, விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 அரசு நடுநிலைப் பள்ளிகளை, சார்ந்த, 55 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அறிவியல் ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலமாக, 35 கிலோமீட்டர் உயரத்துக்கு அனுப்பப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் அங்கீகாரம் பெற்ற விண்வெளிப் பயிற்றுநர் அமைப்பான ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் மற்றும் டெக்னோ சயின்ஸ் எல்.எல்.பி., ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 இத்திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.
‘உயர்வு’ எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் வாயிலாக, 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 55 மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியின் பல்வேறு நுட்பங்களைப் பயின்று, சுமார் 2 கிலோ எடையுள்ள ஆய்வுக் கருவித் தொகுப்பை உருவாக்கினர்.
கடந்த அக்டோபர் 30ம் தேதி ஹீலியம் பலூன் மூலம் ஏவப்பட்ட இந்த ஆய்வுக் கருவி, பூமியின் மேற்பரப்பிலிருந்து 35 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரத்தை அடைந்தது. பூமியின் அடுக்கு மண்டலப் பகுதியில் பயணித்த இந்தக் கருவி வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம், உயரம் மற்றும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு ள்ளது. விண்ணருகிலிருந்து பூமியின் புகைப்படங்கள்
இந்த ஆய்வுப் பயணத்தின் போது, 35 கி.மீ., உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் முதன்முறையாக கோவை காட்டூர் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. விண்ணருகு வளிமண்டலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள், மாணவர்களின் அறிவியல் முயற்சிக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கருதப்படுகின்றன.
330 மாணவர்கள் அடுத்தகட்ட ஆய்வில் பங்கேற்பு
இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டமாக, பங்கேற்ற பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 330 மாணவர்கள் ஆய்வுக் கருவி சேகரித்த அறிவியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் மற்றும் டெக்னோ சயின்ஸ் நிறுவனங்களின் இணை நிறுவனர், அபுதாபி அல் சதீம் அஸ்ட்ரானமியின் முதன்மை விஞ்ஞானி சுரேந்தர் பொன்னழகர், கல்வியாளர் பரத்குமார் வேலுசாமி, துடியலூர் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் டாக்டர் எஸ். சித்ரா, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3206 மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் ஆர்.எஸ். மாருதி, ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோ டைனமிக்ஸ் உடனடி முன்னாள் தலைவர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டரியன் மகேஷ் பிரபு, பரத்குமார் வேலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

