நஞ்சை நிலப் பயன்பாட்டு மாற்ற நடைமுறையில் சீர்திருத்தம்

Loading

FAIRA-வின் நீண்டகாலக் கோரிக்கைக்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு!நஞ்சை நிலப் பயன்பாட்டு மாற்ற நடைமுறையில் முக்கியச் சீர்திருத்தம்

 

மாவட்ட ஆட்சியர் அலுவலக நடைமுறைக்குப் பதிலாக மூன்று துறை அதிகாரிகளின் NOC பெறும் புதிய நடைமுறை – தமிழக அரசுக்கு டாக்டர் ஹென்றி மனமார்ந்த பாராட்டு!

அரசாணை எண்: 201 | நாள்: 04.11.2026 தமிழகத்தில் திட்டமிடப்படாத பகுதிகளில் (Non-Planning Areas) அமைந்துள்ள நஞ்சை நிலங்களை விவசாயம் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றி அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி பெறுவதில் நீண்டகாலமாக இருந்து வந்த நிர்வாகச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முக்கியமான விதித் திருத்தத்தை மேற்கொண்டு அரசாணை எண் 201-ஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகத் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டிய நடைமுறைக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட மூன்று துறை அதிகாரிகளிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறும் புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறையில் தடையின்மைச் சான்றிதழ் வழங்க வேண்டிய அதிகாரிகள்:

  1. வருவாய்த்துறை – வருவாய் கோட்டாட்சியர் (RDO).
  2. வேளாண்மைத்துறை – இணை இயக்குநர் (Joint Director of Agriculture).
  3. நீர்வளத்துறை – செயற்பொறியாளர் (Executive Engineer).

மேலும், ஆன்லைன் ஒற்றைச் சாளர இணையதளம் (Online Single Window Portal) வாயிலாக விண்ணப்பிக்கவும், பட்டா, சிட்டா, அடங்கல், உரிமை ஆவணங்கள், தள வரைபடம், வடிகால் வரைபடம் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யவும் புதிய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

FAIRA-வின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த முக்கியமான பலன்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகத் தடையின்மைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டு வந்த காலதாமதம், பல்வேறு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது.

சட்டமன்றத்தில் கொள்கை அறிவிப்பு வெளியான பின்னரும் அரசாணை வெளியீட்டில் ஏற்பட்ட தாமதத்தைச் சுட்டிக்காட்டி, FAIRA மீண்டும் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது உரிய விதித் திருத்தம் மேற்கொண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர் ஹென்றி தமிழக அரசுக்கு மனமார்ந்த பாராட்டு!

இதுகுறித்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள் தெரிவிக்கையில்:

“ரியல் எஸ்டேட் துறையினர், நில உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த ஒரு முக்கியமான நிர்வாகச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை மனதார வரவேற்கிறோம்.

FAIRA தொடர்ந்து முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்து, உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கும், குறிப்பாக தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நடைமுறை முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும்போது ரியல் எஸ்டேட் அபிவிருத்தி, தொழில் முதலீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான அனுமதி நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு, தேவையற்ற காலதாமதம் குறைவதற்கு வழிவகுக்கும்.

இந்த அரசாணை விரைவாகக் களநிலையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, ஆன்லைன் ஒற்றைச் சாளர வசதிகளும், தெளிவான வழிகாட்டுதல்களும், விண்ணப்பப் பரிசீலனைக்கான காலக்கெடுவும் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும் இந்த முக்கியமான நிர்வாகச் சீர்திருத்தத்தை வரவேற்று, தமிழக அரசுக்கும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கும் FAIRA சார்பில் மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

0Shares