உங்கள் நிலம் நாளை அனாதீனம் ஆகலாம்-A.ஹென்றி
![]()
உங்கள் நிலம் நாளை ‘அனாதீனம்’ ஆகலாம்” பொதுமக்களுக்கு டாக்டர் ஆ.ஹென்றியின் அவசர விழிப்புணர்வு எச்சரிக்கை
தமிழகத்தில் நிலம் வைத்திருக்கும் பொதுமக்கள் தங்களது சொத்துக்களை முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டினால், அந்த நிலங்கள் எதிர்காலத்தில் “அனாதீனம்” எனப்படும் அபாய நிலைக்கு தள்ளப்படலாம் என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு நிலத்தின் உரிமையாளர் நீண்டகாலமாக நிலவரி செலுத்தாமல் இருப்பது, வாரிசு பெயர் மாற்றம் செய்யாமல் காலம் தாழ்த்துவது, நிலத்தை பராமரிக்காமல் கைவிடுவது, பட்டா மற்றும் வருவாய் ஆவணங்களை புதுப்பிக்காமல் விடுவது போன்ற காரணங்களால், அந்த நிலம் அரசின் ‘அனாதீனம்’ பதிவேட்டில் சேர்க்கப்படும் அபாயம் உருவாகிறது.
குறிப்பாக ரயத்துவாரி நிலங்களில் நிலவரி தொடர்ந்து செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலம் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்லக்கூடிய சூழல் ஏற்படும். வருவாய்த் துறை A-Register-ல் ‘அனாதீனம்’ என பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த நிலத்தின் மீது உரிமை நிரூபிப்பது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறிவிடும்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், உரிமையாளர்கள் இருந்தபோதிலும் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அபாய நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. ‘பட்டா கையில் இருக்கிறது; இனி எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்ற தவறான நம்பிக்கையே பலரின் சொத்துக்களை சட்ட சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது.
பட்டா, சிட்டா, அடங்கல், FMB, நிலவரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்காதது, நிலத்தை நேரில் பார்வையிடாமல் இருப்பது, எல்லைக் கற்களை சரிபார்க்காமல் அலட்சியம் காட்டுவது போன்றவை பின்னாளில் உரிமை தகராறு, போலி ஆவண மோசடி, வாரிசு பிரச்சினை மற்றும் நீதிமன்ற வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன.
எனவே பொதுமக்கள் ஆண்டுதோறும் நிலவரி செலுத்தி ரசீதுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை e-Services மூலம் அவ்வப்போது பதிவிறக்கம் செய்து சரிபார்க்க வேண்டும்.
குடும்பத்தில் சொத்து வைத்திருப்பவர் இறந்தால் உடனடியாக வாரிசு பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அதுபோல் FMB படி எல்லைக் கற்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேவையானால் Surveyor மூலம் மீண்டும் அளவீடு செய்து கற்கள் நட வேண்டும்.
நிலம் என்பது வெறும் சொத்து அல்ல; அது ஒரு குடும்பத்தின் பாதுகாப்பும், எதிர்காலத்தின் அடித்தளமும் ஆகும். அதை கவனிக்காமல் விட்டால், அதே நிலம் ஒருநாள் உரிமை இழப்புக்கும் சட்ட சிக்கலுக்கும் காரணமாக மாறக்கூடும்.
‘நிலத்தை பாதுகாப்போம்… உரிமையை உறுதிப்படுத்துவோம்… எதிர்காலத்தை காப்போம்…’ என்ற விழிப்புணர்வு எண்ணத்துடன் பொதுமக்கள் விழித்திருக்க வேண்டும்,” என்று டாக்டர் ஆ.ஹென்றி தெரிவித்துள்ளார்.க்டர் ஆ.ஹென்றி பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளார்.

