வீரராகவ பெருமாள் சித்திரை பிரம்மோற்சவ விழா
![]()
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா கோலாகலம் :
திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்றான 59 வது திவ்ய தேசமான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றவும், நோய்தீர வேண்டிக் கொள்ளவும், நோயை தீர்த்த ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாளுக்கு வேண்டுதலை நிறைவேற்றவும் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாளை வணங்குவது வழக்கம்.
இந்நிலையில் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் மே மாதம் 1 ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி கடந்த 22 ம் தேதி புதன்கிழமை காலை 4.15 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு 5.30 மணியளவில் தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணி அளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது. 23 ம் தேதி வியாழக்கிழமை காலை 5 மணியளவில் ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9:30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சூரிய பிரபை புறப்பாடும் நடைபெற்றது
பிறகு 24 ம் தேதி காலை 4 மணியளவில் கருட சேவையும், கோபுர தரிசனமும், காலை 6 மணியளவில் வீதி புறப்பாடும் மாலை 3 மணியளவில் திருமஞ்சனமு,ம் இரவு 7.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அதேபோல் 25 ம் தேதி காலை 5 மணியளவில் சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சந்திர பிரபையும், 26 ம் தேதி காலை 4 மணியளவில் நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும், 27 ம் தேதி காலை 5 மணியளவில் வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும், 6 மணிக்கு வெள்ளி சப்பரமும், 10.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யானை வாகனமும் நடைபெற்றது.
இந்நிலையில் 28 ம் தேதி செவ்வாய்க்கிழமை பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாள் வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காலை 5 15 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் காலை 7.30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தேர் திருவிழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர்.
பின்னர் மாலை 6.30 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேததரராய் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் தேரிலிருந்து எழுந்தருளுதலும், திருமஞ்சனமும், இரவு 9:30 மணியளவில் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளும் நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் செய்துள்ளனர்.

