திருவள்ளூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரால் ரூ.70.72 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் கைபற்றப்பட்டது : மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மார்ச் 26 : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர்,பூந்தமல்லி,ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கால அட்டவணை கடந்த 15.03.2026 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்திற்க்குட்பட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்திட ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பறக்கும் படையினர் மற்றும் மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் 8 மணி நேர சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, திருவள்ளூர் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஐந்து செலவினம் அதிகமாக ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட தொகுதிகளில் (பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி மற்றும் திருவொற்றியூர்) கூடுதலாக ஒரு பறக்கும் படையினர் மற்றும் ஒரு நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர்கள் கடந்த 15.03.2026 முதல் 25.03.2026 வரையிலான தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரொக்கபணம் ரூ.3,31,05,895, 62.91 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த தங்கம் (ம) வைர ஆபரணங்கள் 44.759 கிலோவும், 1.40 இலட்சம் மதிப்பிலான 16.900 கிலோ கஞ்சா, 3387 மதிப்புடைய 28 மதுபானங்கள் மற்றும் இதர 3.10 இலட்சம் மதிப்பிலான இதர பரிசுப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது. ஆக மொத்தம் மதிப்பு ரூ.70,72,09,282 ஆகும்.
மேற்படி ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பணம் (ம) பொருள்களுக்குரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து திரும்ப பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -7373704202,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்), லட்சுமி – 9443965474, திருவள்ளூர் மாவட்ட கருவூல அலுவலர் உஷா – 9940025366 ஆகியோர் அடங்கிய குழு விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றை சரிபார்த்து,சரியாக இருப்பின், பறிமுதல் செய்யப்பட்ட பணம் (அ) பொருள்கள் விடுவிக்க உத்திரவிடப்படும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.