பட்டா வழங்காததை கண்டித்து முற்றுகை
![]()
மீஞ்சூர் ஒன்றியத்தில் 50 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதி திராவிட பூர்வகுடியை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் :
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் ஏலியம்பேடு கிராமம் பெரியார் நகரில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த 70 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இவர்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் வீட்டு வரி, குடிநீர் இணைப்புக்கான வரி, மின் இணைப்பு கட்டணம் செலுத்தி வருவதாகவும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்கள் அனைத்தும் உள்ள நிலையில் வீட்டுமனை பட்டா வழங்காததால் அரசு திட்டங்களை பெற முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் இரண்டு தலைமுறையாக பட்டா இல்லாமல் அவதிப்பட்டு வந்த தங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் குடும்ப அட்டை ஆதார் அட்டை போன்ற அரசு ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் போவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் நுழைவு வாயிலில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

