திருவள்ளூரில் 5.28 இலட்சத்தில் மாவட்ட திறன் மையம்
![]()
திருவள்ளூரில் ரூ. 5.28 இலட்சத்தில் மாவட்ட திறன் மையம் திறனகம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் :
திருவள்ளூர் மார்ச் 05 : தமிழ்நாடு துணை முதலமைச்சர் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 23 திறனகங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலக முதல் தளத்தில் ரூ.5,28,194 இலட்சத்தில் மாவட்ட திறன் மையம் திறனகத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு குத்து விளக்கு ஏற்றி இனிப்புகளை வழங்கினர்.அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து 38 மாவட்டங்களிலும் மொத்தம் ரூ.5.96 கோடி மதிப்பீட்டில் “திறனகம்” எனும் சிறப்பு மாவட்ட திறன் மையங்களை நிறுவியுள்ளது. இது மாநிலம் முழுவதும் மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய கட்டமாகும். அதே நிகழ்வில், திறனகங்களின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்த முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.இத்திட்டம் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு வழங்கப்படும் தொழில் வழிகாட்டல் சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தைக் கொண்டது.
இக்கூட்டாண்மை, நிறுவன அமைப்புகளை வலுப்படுத்துதல், நிலையான செயற்பாட்டு நடைமுறைகள் உருவாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த தொழில் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் அனைத்து திறனகங்களிலும் பயனுள்ள சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும்.தொழில் துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பாடப்பிரிவுகளைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களோடு இந்த மையங்கள் ஒருங்கிணைக்கும். மாணவர்களுக்கு Internship மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இந்த மையங்கள் உதவும். மாணவர் சேர்க்கை, திறன் சான்றிதழ் பெறுதல் மற்றும் வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களைக் கண்காணிக்க இந்த மையங்கள் உதவும்.
இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு 11 அரசு பல்கலைக் கழகங்களில் (அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் 10 கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்கள்) நான் முதல்வன் பல்கலைக் கழக செயல்பாட்டு மையங்கள் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டங்கள் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாடு மூலம் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் அரசின் உறுதியான நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் விஜயா, திறன் பயிற்சி உதவி இயக்குநர் சித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

