கொலைமிரட்டல்எஸ்.பி யிடம்பாதிக்கபட்டபெண்புகார்
![]()
ஈரோடு அருகே நிலத்தகராறில் பெண் மற்றும் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்: மாவட்ட எஸ்.பி-யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பெரிய கொடிவேரி, சின்னட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: சின்னட்டிபாளையம் பட்டாளம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் எனக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சின்னசாமி, தங்கராஜ், தங்கமணி உள்ளிட்ட சிலருக்கும் இடையே நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு, விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மாலை எங்களது வீட்டுத் தோட்டத்தில் இருந்த மல்லிகைச் செடி மற்றும் வாழை மரங்களைச் சின்னசாமி தரப்பினர் அத்துமீறி வெட்டியுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட என்னையும், எனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி விடுவோம் என மிரட்டித் துரத்தியுள்ளனர். மேலும், என்னைத் தோட்டத்தில் வைத்து அரிவாளைக் காட்டி மிரட்டித் தாக்கியுள்ளனர். ஏற்கனவே எனது தந்தையைத் தாக்கியது தொடர்பாக சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் கொலை மிரட்டல் விடுத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்துக் கேட்டால், காவல் நிலையத்திற்குச் சென்றால் உன்னைக் கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர். எனவே, எங்களது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் சின்னசாமி, தங்கராஜ் மற்றும் தங்கமணி ஆகியோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மஞ்சுளா தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

