750 ஆண்டுகால வரலாற்றுச் சின்னத்தைச் சிதைப்பதா?

Loading

ஈரோடு
750 ஆண்டுகால வரலாற்றுச் சின்னத்தைச் சிதைப்பதா? – காலிங்கராயன் தொட்டிப் பாலத்தை இடிக்க அதிமுக முன்னாள் எம்எல்ஏ கடும் எதிர்ப்பு!
ஈரோடு மாவட்டத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் காலிங்கராயன் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள, 13-ஆம் நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க ‘தொட்டிப் பாலத்தை’ இடிக்க முயலும் திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ வி.பி. சிவசுப்பிரமணியம் கூறியதாவது:
“13-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்த காலிங்கராயன், நதிகள் இணைப்பிற்கு முன்னோடியாகப் பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டி இந்தக் கால்வாயை உருவாக்கினார். இதன் மூலம் சுமார் 16,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குறிப்பாக, ஈரோடு அருகே பெரும்பள்ளம் ஓடையைக் கடப்பதற்காக 14 மதகுகளுடன் பாறாங்கற்களால் கட்டப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், தமிழகத்தின் முதல் ‘மேல்வழி நீர்ப்பாலம்’ என்ற வரலாற்றுப் பெருமை கொண்டது.
தற்போது கால்வாயைச் சீரமைப்பதாகக் கூறி, இந்த வரலாற்றுச் சின்னத்தை இடிக்க திமுக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் பாலத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை; கசிவு மற்றும் அடைப்புகளைச் சரிசெய்தாலே போதுமானது. அதை விடுத்து, 750 ஆண்டுகாலப் பாரம்பரியத்தை எதற்காக அழிக்க வேண்டும் என்பதைப் பொறுப்புள்ள அமைச்சர்கள் விளக்க வேண்டும். அமைச்சருடன் இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நலன் கருதிப் பாலங்கள் விரைவாகக் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், திமுக அரசு வரலாற்றுச் சின்னத்தைச் சிதைப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இந்தப் பாலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால், கீழே கழிவுநீர் தடையின்றிச் செல்லும். அதைச் செய்யாமல் பாலத்தையே இடிக்க முயன்றால், விவசாயிகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0Shares