உதகை 128 வது மலர்காட்சிமலர் நாற்றுகள் நடும் பணி
![]()
நீலகிரி
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறவுள்ள
128 வது மலர்காட்சி முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம்,உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2026 மே மாதம் நடைபெறவுள்ள 128-வது மலர் காட்சியை முன்னிட்டு, மலர் நாற்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2026 மே மாதம் நடைபெற இருக்கும் 128-வது மலர்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகள் அமைத்து பல வண்ண மலர்ச் செடிகள் நடவு செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்றைய தினம் இன்கா மேரிகொல்டு, பிரன்ச் மேரிகோல்டு, லில்லியம்ஸ் மற்றும் டேலியா போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியானது துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2025-ல் 7.5 இலட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.
இவ்வாண்டு சிறப்பு அம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய இரக ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா மற்றும் பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோசியா, ஆன்டிரைனம்,i டயான்தஸ், ஆஸ்டர், ஜெர்பரா, க்ரைசாந்திமம், டெல்பினியம், சால்வியா, ஆந்தூரியம் போன்ற 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 இலட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டு வருகின்றன. நடவு செய்யப்படும் மலர் நாற்றுகளுக்கு பணியின் தாக்கம் ஏற்படாத வண்ணம் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாப்பு செய்யப்படும்.மேலும் எதிர்வரும் மலர்க்காட்சியினையொட்டி மலர்க்காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 50,000 வண்ண மலர்த் தொட்டிச் செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இப்பூங்காவிற்கு 22.28 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்துள்ளனர். இந்த ஆண்டு 25 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

