கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்
![]()
ஈரோடு: 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும் – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு
ஈரோட்டில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் கொங்கு மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டத் தலைவர் மீரான் தலைமையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து தேர்தல் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொங்கு மண்டலத்தின் 50 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வலுவான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய அவர், அமெரிக்காவுடன் செய்யப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் தொழில் வர்த்தகத்தைப் பாதிக்கும் என்றும், அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி விலக்கு அளித்திருப்பது பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் சரணடைந்திருப்பதையே காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
இதனால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் பின்னலாடை மற்றும் நெசவுத் தொழில்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கவலை தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்காமல் பெண் எம்.பி.க்கள் தன்னைத் தாக்குவதாகக் கூறி பிரதமர் நாடகம் ஆடுவதாக விமர்சித்தார்.
மேலும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற அறிவிப்பு அரசியல் சாசன மரபுகளுக்கு எதிரானது என்றும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதாரச் சரிவிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிமுன் அன்சாரி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

