தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 25-வது மாநில பொதுக்குழு
![]()
ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 25-வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 25-வது மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச் செயலாளர் முஜிப் ரஹ்மான், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவே அமையும் என்றும், இதற்குத் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும், சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவர் வெளிநடப்பு செய்தது மக்கள் நலனுக்கு எதிராக அவர் செயல்படுவதையே காட்டுவதாகவும் முஜிப் ரஹ்மான் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) போன்ற புதிய கட்சிகள் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், விஜய் தற்போதுதான் முதல் முறையாகத் தேர்தலைச் சந்திக்க உள்ளார் என்றும், அவர் இன்னும் முழுமையான அரசியல் நிலைப்பாடுகளையும் கொள்கை விளக்கங்களையும் அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும், த.வெ.க போன்ற கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பது என்பது இறுதியில் அதிமுக போன்ற கட்சிகள் ஆட்சிக்கு வரவோ அல்லது பாசிச சக்திகள் கால் பதிக்கவோ வழிவகுக்கும் என எச்சரித்தார். வாக்குகளைப் பிரிக்கும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும், அவ்வாறு வாக்களிப்பது ஒரு நல்லாட்சி அமைவதற்குத் தடையாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார். விஜய் பாஜகவின் ஏஜெண்டாகச் செயல்படுகிறார் என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவருக்குப் போடப்படும் வாக்குகள் மறைமுகமாகப் பாசிச கட்சிகள் ஆட்சி அமைக்கவே சாதகமான சூழலை உருவாக்கும் என்றார்.
மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் இஸ்லாமிய மக்களின் விகிதாசார அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அவர், இஸ்லாமியர்களின் நலன் காக்கும் திட்டங்களை எந்தக் கட்சி முன்வைக்கிறதோ, அந்தக் கட்சிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை வழங்கும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

