பதிவுத்துறையில் சந்தைமதிப்பை சீரமைக்க வேண்டும்
![]()
பதிவுத்துறையில் சந்தை மதிப்பை சீரமைக்க வேண்டி முதல்வருக்குபெயிரா கடிதம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர்.ஹென்றி தமிழகத்தில் பதிவுத்துறையின் இணையதளம் tnreginet.gov.in-ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக 30% உயர்த்தி முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலிக்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்கள் வாய்மொழி .உத்தரவு பிறப்பித்துள்ளதாக பதிவுத்துறையினர் கூறுவது குறித்தும் மற்றும் சந்தை மதிப்பை விட (முரண்பாடாக உச்சபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சொத்துக்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் குறைவு முத்திரை தீர்வை சம்பந்தப்பட்ட சொத்துக்களை பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்…
தமிழகம் முழுவதும் பதிவுத்துறை அலுவலகங்களில் பதிவுத்துறையின் இணையதளத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக 30% உயர்த்தி முத்திரைத்தாள் கட்டணத்தை வசூலிக்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்கள் வாய்மொழி .உத்தரவிட்டுள்ளதாகவும் எனவே மேற்கண்ட வகையில் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும் என பதிவுத்துறை அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்த புகாருக்கு தீர்வு காண வேண்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் (FAIRA கடித எண்: 130 /2025 தேதி:26.09.2025) எழுதியிருந்தோம்.
மேற்கண்ட எமது பெயிரா கூட்டமைப்பு தெரிவித்த புகார் குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரிகள் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்திற்கு, கூடுதல் பதிவுத்துறை தலைவர் (வழிகாட்டி) அவர்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் (ந.க.எண்.43355/எல்1/2025. நாள்.30.10.2025) தங்களது கோரிக்கை மனு பரிசீலிக்கப்பட்டது, வழிகாட்டி மதிப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47(A)-ன் கீழ் தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி.மூர்த்தி அவர்கள் பத்திர பதிவுகளுக்கு 30% வரை வழிகாட்டி மதிப்பை உயர்த்தி, முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்க தான் வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறி வெளியான செய்தியை மறுத்ததுடன், ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் இதுபோன்று அவதூறுகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளதை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
மேலும் தமிழ் நாட்டின் முதலமைச்சராக தாங்கள் பொறுப்பேற்று கடந்த 4½ ஆண்டுகளில் எல்லார்க்கும் எல்லாம் என்கின்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி நாடு போற்ற நல்லாட்சி புரிந்து வருவதினை நாடும்-ஏடும்- நாளும் பாராட்டி வருகின்றன எமது பெயிரா கூட்டமைப்பின் சார்பாக தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்ற பொது மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நலத்திட்டங்களை பாராட்டியும் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியும் கடிதங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இக்கடிதம் இந்திய முத்திரை சட்டப்பிரிவு 47A(1)ன் கீழ் குறைவு முத்திரை தீர்வை சம்பந்தப்பட்ட சொத்துக்களை பதிவுத்துறையைச் சார்ந்த ஒரு சில பொறுப்பற்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ள மறுப்பதினால் சட்டப்பிரிவு 47A(1)ன் கீழ் பொதுமக்கள் பயனடைய முடியாமல் ஏட்டளவில் மட்டும் உள்ளது என்பதனை குறித்து தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
நிலம் என்பது மனிதனின் இன்றியமையாத அடிப்படை தேவை மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைக்கான பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை தரக்கூடிய சொத்தாக விளங்குகிறதென்றால் அது மிகையாகாது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலம் அல்லது கட்டிடம் போன்ற சொத்து சம்பந்தப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு சந்தை மதிப்பை விட (முரண்பாடாக) உச்சபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மற்றும் ஆவண மதிப்பு முறையாக நிர்ணயிக்கப்படாத சொத்துக்களுக்கு தீர்வு காணும் வகையில் அத்தகைய ஆவணங்களை மதிப்பாய்வு செய்து சரியான வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்து அந்த ஆவணத்திற்கு சரியான முத்திரை தீர்வை நிர்ணயித்து உறுதி செய்து உத்தரவு பிறப்பித்து ஆவணத்தை விடுவிப்பதே இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(1) நடைமுறைபடுத்தபட்டத்தின் நோக்கமாகும்.
பொதுமக்கள் மேற்கண்ட வகையில் உள்ள தங்களுடைய சொத்துக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சம்பந்தப்பட்ட ஆவணங்களை முத்திரை வரி மதிப்பீட்டிற்காக அந்தந்த பெருநகரங்களில் உதாரணமாக சென்னை, திருச்சி, சேலம், நெல்லை. மதுரை, கோவை மற்றும் தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் உள்ள அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) பிற மாவட்டங்களில் தனித்துணை ஆட்சியர் (முத்திரை)-க்கு அனுப்பப்படும் ஆவணங்களை இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் குறைவு முத்திரை தீர்வை சம்பந்தப்பட்ட சொத்துக்களை வருவாய்த்துறை அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு ஆவணங்களை மதிப்பாய்வு செய்து சரியான வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்து அந்த ஆவணத்திற்கு சரியான முத்திரை தீர்வை நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்து ஆவணத்தை விடுவிப்பது போன்ற பணிகள் முறையாக நடைபெற்று வந்தது.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் குறைவு முத்திரை தீர்வை சம்பந்தப்பட்ட ஆவண பதிவுகளை பதிவுத்துறையினர் மேற்கொள்ளாமல் தட்டி கழித்து வருகின்றனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை) மற்றும் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர்கள் பதிவு செய்வதற்கு அனுமதிக்காமல் மேலிடத்து வாய்மொழி உத்தரவு என கூறி பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A(1) தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது. இச்சட்டபிரிவு குறித்து நீதீமன்றத்தால் இதுநாள் வரை எந்த ஒரு தடையும் விதிக்கப்படவில்லை என்பது மட்டுமல்லாமல் தமிழக அரசால் எவ்வித சட்டத்திருத்தமும் (Amendment) மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இச்சட்டபிரிவினை பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள மறுப்பதுடன் பதிவுத்துறை அதிகாரிகள் ஏக்கருக்கு குறிப்பிட்டு தொகையை தாருங்கள் என வெளிப்படையாகவே துளியும் அச்சமின்றி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுகிறார்கள். இத்தகைய பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் சந்தை மதிப்பை விட உட்சபட்ச வழிகாட்டி மதிப்பினை நிர்ணயிப்பதால் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய அவசர தேவைகளுக்கு கூட சொத்துக்களை விற்க முடியாமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் தங்களின் பொருளாதார சூழ்நிலையை கருதி வேறு வழியின்றி எப்படியாவது தங்களது சொத்து சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை முறையாக ஆய்வு செய்து சரியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்யாமல் தான்தோன்றித்தனமாக அலட்சியமாக செயல்படுகிறார்கள்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்ட பிரச்சினையை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு நில மதிப்பு வழிகாட்டி மதிப்பை விட மதிப்பு உட்சபட்சமாக இருக்கும் பட்சத்தில், இந்திய முத்திரை சட்டம் பிரிவு 47A(1)ன் கீழ் குறைவு முத்திரை தீர்வை சம்பந்தப்பட்ட ஆவண பதிவுகளை பரிசீலித்து பதிவுத்துறை அதிகாரிகள் சரியான வழிகாட்டி மதிப்பினை நிர்ணயம் செய்திடும் வகையிலும், மேலும் மேலிடத்து வாய்மொழி உத்தரவு என்கின்ற பெயரில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படும் சம்பந்தப்பட்ட பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நிர்வாக ரீதியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக ஆ.ஹென்றி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

