தேர்தல் காலங்களில் பதிவுத்துறை தலைவர் மக்களை சந்திக்க தடையா

Loading

தேர்தல் காலங்களில் பதிவுத்துறை தலைவர் பொதுமக்களைசந்திக்க தடையுள்ளதா? மாநில அரசிடம் விளக்கம் கோரி பெயிரா கடிதம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர்  டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தேர்தல் காலங்களில் பதிவுத்துறை தலைவர் பொதுமக்களை சந்திக்க தடையுள்ளதா? பொதுமக்கள் நலன் கருதி தலைமைச் செயலாளர் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ளார்..

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருவாய் வழங்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக பதிவுத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் சேவைகளை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் கணினி மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு (FAIRA) வரவேற்று பாராட்டுகிறது.

ஆனால், மாநிலம் முழுவதும் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவது கவலைக்குரியதாக உள்ளது. சரியான ஆவணங்கள் இருந்தும் பதிவு மறுப்பு, தேவையற்ற ஆவணங்கள் கேட்டு அலைக்கழித்தல், லஞ்சம் கோருதல், இடைத்தரகர்களின் மூலம் வரும் ஆவணங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்துள்ளன.

மேலும், போலி ஆவணங்கள் மற்றும் வாரிசு மறைப்புகள் தொடர்பாக அளிக்கப்படும் மனுக்கள் கூட சரியான ஆய்வு இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் பொருளாதார இழப்புகளையும்,                            மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க பதிவுத்துறை தலைவரை சந்திக்க முயன்றாலும், அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தேர்தல் காலங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பதிவுத்துறை தலைவர் மட்டும் பொதுமக்களை சந்திக்காததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதமாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமா? அல்லது தனிப்பட்ட நிர்வாக முடிவா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. மேலும், மற்ற துறைகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பதிவுத்துறை தலைவருக்கு மாற்றம் இல்லாததும், பொதுமக்களை சந்திக்காததும் சந்தேகங்களை அதிகரித்துள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு உடையவர்கள். குறைகளை கேட்டு தீர்வு காண்பது நல்ல நிர்வாகத்தின் அடிப்படை அம்சமாகும்.

இதனையடுத்து, பெயிரா கூட்டமைப்பு மாநில அரசிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:

பதிவுத்துறை தலைவர் பொதுமக்களை சந்திக்காததற்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக விளக்க வேண்டும்.தேர்தல் காலங்களில் சந்திப்பதற்கு ஏதேனும் சட்ட அல்லது நிர்வாகத் தடை உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.தடை இல்லையெனில் உடனடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை தீர்க்க உத்தரவு வழங்க வேண்டும்.

பதிவுத்துறையில் நிலவும் சீர்கேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பதிவுத்துறை தலைவர் தனது கடமையை நிறைவேற்ற தவறியிருப்பது உறுதியாக இருந்தால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று அதிகாரியை நியமிக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் என கோரிக்கை வைத்து  டாக்டர் ஆ.ஹென்றி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

0Shares