அமைதி ஒப்பந்தம் ஏற்பு.. அமெரிக்காவுக்கு அடிபணிந்தது ஹமாஸ்!
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வந்தது முடிவுக்கு வந்தது.இஸ்ரேல் உடனான அமைதி ஒப்பந்தத்தை ஏற்று பணய கைதிகளை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இதில், 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு கடந்த திங்கட்கிழமை சென்றார். அப்போது, காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது.
இதையடுத்து காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது. டிரம்புக்கு 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன.
இந்நிலையில், டிரம்ப் கடந்த செவ்வாய் கிழமை கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் என்றார்.
இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், டிரம்ப் நேற்று வெளியிட்ட செய்தியில், ஹமாஸ் அமைப்பு அமெரிக்க நேரத்தின்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும்.
ஒவ்வொரு நாடும் அதில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த இறுதி வாய்ப்புக்கான ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லையெனில், இதற்கு முன் ஒருவரும் பார்த்திராத நரக கொடுமையை ஹமாஸ் அமைப்பு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மத்திய கிழக்கு பகுதியில் ஒன்று அமைதி ஏற்படும். இல்லையென்றால் அமைதியின்மை ஏற்படும் என அவருடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
இந்நிலையில் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, டிரம்பின் 20 அம்ச திட்டங்கள் குறித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.