எல்லாம் தனியார் மயம் எனில் மேயர் பதவி எதற்கு?…சீமான் ஆவேசம்!
சென்னை மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இதனால் மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இந்த தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்த போராட்டம் இன்று 10-வது நாளை எட்டி உள்ளது.தூய்மை பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப்பணியாளர்களை சந்தித்து பேசினார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்கூறியதாவது:நகரை சுத்தமாக்கும் தூய்மை பணியை தனியார் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பினார்,
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குப்பை அள்ளும் பணியை கூட தனியாரிடம் என்றால் அரசுக்கு என்ன வேலை? எல்லாம் தனியார் மயம் எனில் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்வது ஏன்?மாநகரத்தை தூய்மைப்படுத்தும் பணியை தனியாரிடம் ஒப்படைத்தால் மேயர் பதவி எதற்கு? என தமிழக அரசுக்கு அடக்குகடுக்கான கேள்விகளை முன்வைத்தார் அப்போது சீமான்.