பாசிசத்தின் பாய்ச்சல்: ஜனநாயகக் குரல்வளையை நசுக்கும் முயற்சி..விசிக மாவட்ட செயலாளர் ஆவேசம்!

Loading

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விற்கு துணை நிற்போம் என நாகர்கோவில் மாநகர் விசிக மாவட்ட செயலாளர் அல்காலித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “அதிகாரம் பெற்ற அமைப்புகள் அனைத்தும் அண்மைக்காலமாக மத்திய அரசின் கைப்பாவையாக மாறி வருகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என நீண்ட பட்டியலே போடலாம். அந்தவரிசையில் இப்போது நீதிமன்றங்களும் மாறிவிட்டதோ என என்னும் அளவுக்கு சில சம்பவங்களும் அரங்கேறவே செய்கின்றன.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்யாத குற்றத்திற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விசயத்தில் நடந்த சம்பவத்தை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1997 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி, கோவையில் சங் பரிவார் கும்பலும், சில காவலர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்திய தொடர் கலவரம், கொள்ளை, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றில் 19 இஸ்லாமியர்கள் உயிர் இழந்தனர்.

அதுமட்டும் இன்றி, கோவையில் உள்ள இஸ்லாமியர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் சூறையாடப்பட்டது. அரசு, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அதனால் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் சமூக அக்கறை கொண்டவர்கள் சேர்ந்து கோவை முஸ்லீம் ரிலீப் பண்ட் என்னும் அறக்கட்டளையைத் தொடங்கினர். இதன் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டி, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

இதைக் கூட சகித்துக் கொள்ளமுடியாத அன்றைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வருமான வரித்துறையை ஏமாற்றியதாகவும் தமமுக_மமகவின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சகோதரர் ஹைதர் அலி ஆகியோர் மீது வழக்குப்பதிந்தது.

இத்தனைக்கும் பணம் வசூல் செய்த அறக்கட்டளைக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே இந்தப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை தீர்ப்பாணையம் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் விசாரித்ததுடன், குற்றத்திற்கான முகாந்திரம் இல்லையென கடந்த 2003 ஆம் ஆண்டிலேயே வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.

ஒன்றிய அரசின் சிறுபான்மை விரோதப் போக்கால் சிபிஐ இன்னும் இந்த வழக்கை பிடித்துக்கொண்டு உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தின் ஓராண்டுகால தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இறுதியானது அல்ல. அடுத்த ஒரு மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துகொள்ள முடியும்.

இதில் ஒன்றிய அரசின் சிறுபான்மை விரோதம், மக்களுக்காக களம் ஆடுவதால் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் முன்னெடுப்பு, பாசிசத்தின் பாய்ச்சல் என அனைத்தும் இருக்கிறது. அடக்குமுறைகளினால் தோழர் ஜவாஹிருல்லாஹ் போன்றவர்களை ஒடுக்கிவிட முடியாது. அவருக்கு எப்போதும் கொள்கை பிடிப்புடன் விடுதலைv சிறுத்தைகள் கட்சியும் துணை நிற்கும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares