விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப்பெற ஆ .ஹென்ரி வலியுறுத்தல்
தமிழக முதல்வருக்கு மக்கள் நலப் பேரவை தலைவர் கடிதம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில்..
பார்வையற்றோருக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சியினை அரசு தொடர்ந்து செயல்படுத்திடவும், அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
தங்களது சீரிய தலைமையின் கீழ் அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், தமிழக அரசால் பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் மேம்பாட்டினை கவனத்தில் கொண்டு, பூவிருந்தவல்லியில் பார்வை குறைபாடு உள்ளவர்களின் திறனை மேம்படுத்துவதற்கு அரசினர் தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை,திருச்சி, மதுரை சேலம் விருத்தாச்சலம் மற்றும் புதுக்கோட்டை போன்ற மேற்கண்ட 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு அச்சகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய பணியாளர்கள் புத்தகம் கட்டுநர் பணியில் நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். இதன் வாயிலாக இவர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளிபெற்று, இதன் மூலம் இவர்கள் இச்சமூகத்தில் பிறரை சாராமல், சுய சம்பாத்தியத்தில் மன நிம்மதியுடன் வாழ்வதற்கும் தன்னை சார்ந்தவர்களை வாழ வைப்பதற்கும் வாய்ப்பைப் பெற்று, சுயமரியாதையுடனும் சுய கௌரவத்துடனும் வாழ்கின்றனர்.
நல்ல உடல் திறன் கொண்ட பணியாளர்களுக்கு ஈடாக தங்களது பணிகளில் சிறப்பாக செயல்பட்டதின் காரணமாக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் அவர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழும் மற்றும் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்ட நிகழ்வை இத்தருணத்தில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
மேலும் அச்சக துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கண்ட அச்சகங்களை நேரில் பார்வையிடாமலும் மற்றும் கள ஆய்வு செய்யாமலும் தவறான புள்ளி விவரங்ககளையும், கருத்துக்களையும் தங்களது துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதின் அடிப்படையில்,
தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை / மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பூவிருந்தவல்லி பார்வை திறன் குறையுடையோருக்கான அரசினர் தொழில் பயிற்சி மையத்தில் பயிற்றுவிக்கப்படும் பார்வையற்றோருக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சினை நிறுத்தம் செய்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை கடந்த 20.09.2024 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்.21/2024 பார்வை திறன் குறைப்பாடு உள்ளவர்களிடையே சுய சம்பாத்தியத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை இழந்ததோடு, பேர் அதிர்ச்சியையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளிகளுக்கான புத்தகம் கட்டுநர் பயிற்சினை நிறுத்தம் செய்வதற்கான காரணங்கள் குறித்து பொது நூலக இயக்குனர், எழுது பொருள் மற்றும் அச்சுத் துணை ஆணையர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் ஆகியோர்கள் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு தவறான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.
பொது நூலகத்துறையானது நவீன காலத்திற்க்கேற்ப மின் நூலகங்களாக மாறி வருவதினாலும் மற்றும் அனைத்து பணிகளுக்கும் நவீன ரக இயந்திரங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதின் காரணமாகவும் வரும் காலங்களில் புத்தகம் கட்டுனர் மற்றும் நூல் கட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேவை குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அவர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்ட சில காரணங்கள் ஏற்று கொள்ள கூடியவைகளாக இருந்தாலும், பல காரணங்கள் மிகவும் அபத்தமானவைகளாக உள்ளன.
எனினும், தற்பொழுது அசுர வளர்ச்சி அடைந்து வரும் அறிவியல் வளர்ச்சி காரணமாக தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இயந்திர சக்தியின் பயன்பாடு அதிகரித்து அதன் விளைவாக மனித சக்தியின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதிலும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இச்சூழலில், நல்ல உடல் தகுதி உள்ள மனிதர்களே தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்ற இத்தருணத்தில்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வை திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகளின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, பரிசீலனை செய்து, இந்த சமுகத்தில் அவர்களும் சுயமரியாதையுடனும், சுய கவுரவத்துடனும் பணியாற்றிடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உரிய திறன் மேம்பாடு பயிற்சிகளையும், அதற்குரிய புதிய வேலை வாய்ப்புகளையும், அனைத்து துறைகளிலும் உருவாக்கிட வழிவகை செய்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் சார்பாக வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.