பதிவுத்துறை தலைவருக்கு பெயிரா தலைவர் கடிதம்

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு, பதிவு பணியை மேற்கொள்ளும் பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில்  அதிகப்படியான ஆவணங்கள் பதிவாகும் 100 சார் பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து, அவைகளை சிறப்பு அலுவலகங்களாக வகைப்படுத்தி விடுமுறை நாளான சனிக்கிழமையும் செயல்படும் வகையில் அறிவித்து, வேலைக்கு செல்லும் பொது மக்களுக்கு ஏதுவாக, சனிக்கிழமையும் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில், வழிவகை செய்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக மேற்கண்ட சிறப்பு வகை சார் பதிவாளர் அலுவலகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி இன்று 31.08.2024 சனிக்கிழமை தமிழகத்தில் செயல்படும் மேற்கண்ட சிறப்பு வகை கொண்ட 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சில அலுவலகங்களை தவிர்த்து, பெரும்பாலான அலுவலகங்களில் இன்று பதிவுபணியை மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்த பொது மக்கள் தங்களின் சொத்து சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்ய இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நிலவுகிறது.

காரணம் பதிவு துறையின் மென்பொருளில் பராமரிப்பு நடைபெறுவதாகவும், மேலும் (TCS) நிறுவனத்தினால் தமிழகம் முழுவதும் உள்ள நிலங்களை ஊரகம் மற்றும் நத்தம் என வகை பாடக பிரித்து பதிவுத்துறையின் மென்பொருளில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுவதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட சதவீதம் நிலங்கள் குறித்த புல எண்கள் மாத்திரமே பதிவு துறையின் மென்பொருளில் இதுவரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெரும்பகுதி நிலங்கள் இன்னும் பதிவுத்துறையின் மென்பொருளில் நிலங்களை வகைப்படுத்தி பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிய வருகிறது. ஆகவே இன்று பதிவு பணியை மேற்கொள்ள திட்டமிட்டு பதிவு அலுவலகங்களுக்கு சென்ற பொது மக்களுக்கு பெருமளவில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

இன்றைய தினம் பதிவு பணியை முடித்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வாங்குபவர் மற்றும் விற்பவர் இடையே விற்பனைத் தொகை வங்கி பரிவர்த்தனை மூலமும், கைமாற்றுத் தொகை மூலமும் நடைபெற்ற பிறகும், பதிவுத்துறையின் மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் பதிவு அலுவலகத்திற்கு சென்றும் பதிவு பணியை மேற்கொள்ள இயலாமல் பொதுமக்கள் மிகுந்த அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பட்டாவின் இணையதளத்தை பதிவு துறையின் மென்பொருளில் இணைத்துள்ளதால் இனிவரும் காலங்களில் இடத்தை விற்பனை செய்பவரின் பெயரில் உட்பிரிவு செய்து பட்டா பெற்ற பின்பே விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்காக இடத்தினை விற்பவர்கள் வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்று அலைந்து திரிந்து பட்டா பெற்ற பின்பு தான் அவர்களின் இடத்தினை விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் தற்பொழுது மாநகராட்சியில் வழங்கப்படும் டவுன் சர்வே பட்டாவில் உட்பிரிவு சர்வே எண்ணுடன் பகுதி (Part) என குறிப்பிட்டு வருவாய் துறையில் பட்டா வழங்கப்படுகிறது. ஆனால் பதிவு துறையின் மென்பொருளில் பகுதி (Part) என்று குறிப்பிட்டால் அவை ஏற்றுக் கொள்ளாமல் உரிய முன்பதிவு டோக்கன் எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் மேற்கண்ட வகையில் உள்ள சொத்துக்களுக்கு பத்திரம் பதிவு செய்வது சிரமமாக உள்ளது.

மேலும் முகூர்த்த நாட்களில் பதிவு துறையின் இணைய தளமானது மிகவும் ஆமை வேகத்தில் மெதுவாக வேலை செய்வதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இதுகுறித்து பதிவுத்துறையின் உதவி மையம், சேவை மையம் போன்றவற்றை பொதுமக்கள் தொடர்பு கொண்டாலும் அவை செயல்படவில்லை. இதனால் அவர்களுக்கு உரிய பதிலும் தீர்வும் இல்லை, பதிவு அலுவலகங்களில் உள்ள அலுவலர்களை அணுகினாலும் பதிவு அலுவலகத்தில் இருந்து எந்தவிதமான சரியான மற்றும் தெளிவான தகவலும் பதிலும் எதுவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாததால், சொத்துக்களை வாங்க நினைத்த பொதுமக்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகள் முடிந்தும், விற்பவர் இனி என்ன செய்வாரோ, ஏது செய்வாரோ எதிர் வரக்கூடிய தினங்களில் முறையாக பதிவு அலுவலகத்திற்கு விற்பவர் நேரில் வந்து பதிவு செய்து கொடுப்பாரோ, மாட்டாரோ என பல ஐயத்துக்கும், அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு உள்ளனர்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட பொதுமக்களின் பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத்துறை மென்பொருளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய ஆன்லைன் 3.0 திட்டத்தை கொண்டு வந்து விரைவில் சரி செய்து,

ஒருவேளை பதிவுத் துறையின் மென்பொருளில் நிலங்களின் வகைப்பாடு குறித்த தகவல்களையும், பழைய பட்டா – புதிய பட்டா, பழைய சர்வே எண் – புதிய உட்பிரிவு சர்வே எண் உள்ளிட்ட தகவல்களை  பதிவேற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால், இனி வரும் நாட்களில் அந்த பணியை விடுமுறை நாட்களில் பதிவேற்றம் செய்யும் வகையில் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எதிர்வரும் திங்கள் 02.09.2024 முதல் பதிவு பணியை மேற்கொள்ள பதிவு அலுவலகங்களுக்கு வருகை தரும் பொது மக்களுக்கு எந்தவிதமான வீண் சிரமமும் அலைச்சலும் மன உளைச்சலும் இன்றி, வழக்கம் போல் பொதுமக்கள் எளிமையான முறையில் பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் பதிவுத்துறை தலைவர் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் என, பதிவு பணியை மேற்கொள்ளும் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

0Shares