தேசிய விண்வெளி தினம் 2024 இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது
தேசிய விண்வெளி தினம் 2024 இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது
சந்திரயான்-3 இயக்கத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி தினத்தை ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்படும் பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். “நிலவைத் தொடும்போது உயிரினங்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்” என்பது தேசிய விண்வெளி தினம் 2024-ன் தொடக்கத்திற்கான மையப்பொருளாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு மீன்வளத்துறையுடன் இணைந்து தேசிய விண்வெளி தினத்தை 2024, ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடுமாறு சென்னையில் உள்ள இந்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதையொட்டி “மீன்வளத்துறையில் விண்வெளித் தொழில்நுட்பப் பயன்பாடு” என்ற தலைப்புடன் பயிலரங்கு நடத்தப்பட்டது.
இந்திய மீன்வள ஆய்வு நிறுவன விஞ்ஞானி டாக்டர் சி பாபு பயிலரங்கில் வரவேற்புரையாற்றினார். தொலையுணர்வு தொழில்நுட்பம் மீன்வளத்துறைக்கும், கடல்சார் ஆய்வுக்கும் மிகச்சிறந்த ஆதார வளமாகும் என்று அவர் பேசும் போது கூறினார். இந்த நிறுவனத்தின் மண்டல இயக்குநர் திரு ஏ டிபூர்டியஸ் தலைமையுரையாற்றினார்.
அகமதாபாதில் உள்ள இஸ்ரோவின் விண்வெளிப் பயன்பாட்டு மைய விஞ்ஞானி டாக்டர் கே என் பாபு, தொலையுணர்வு மூலம் மீன்பிடி மண்டலங்களைக் கண்டறிவது என்ற தலைப்பில் உரையாற்றினார். பெங்களூருவில் உள்ள கடல்சார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஸ்ரீகாந்த், தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு செந்தில் குமார், சிப்னெட் அமைப்பின் திரு ரவிச்சந்திரன், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அருண் ஜெனீஷ், சென்னை காசிமேடு பகுதி மீனவர்களின் பிரதிநிதி கடலார் வேலாயுதம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
இந்திய மீன்வள ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானி திரு ஒய் தருமர் நன்றியுரையாற்றினார். இந்தப் பயிலரங்கில் உள்ளூர் மீனவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், மாநில அரசு அலுவலர்கள் உட்பட சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.