21-வது கால்நடை கணக்கெடுப்பு குறித்த மண்டல பயிலரங்கு
21-வது கால்நடை கணக்கெடுப்பு குறித்த மண்டல பயிலரங்கு
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையும் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறையும் இணைந்து 21 வது கால்நடை கணக்கெடுப்பு குறித்த மண்டல பயிற்சி மற்றும் பயிலரங்கை 2024 ஆகஸ்ட் 02 அன்று சென்னையில் நடத்தின. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் -நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவின் கால்நடை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.
21- வது கால்நடை கணக்கெடுப்பு, நாடு முழுவதும் 2024, செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு நாடு முழுவதும் மண்டல அளவில் நடத்தப்படும் பயிலரங்குகளின் ஒரு பகுதியாக சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. கணக்கெடுப்பு தொடர்பான மென்பொருள், கைபேசி செயலி, கால்நடை இனங்கள் குறித்து இதில் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பயிலரங்கை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு கே கோபால் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் திருமதி அல்கா உபாத்யாயா இதில் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைத் துறையின் பங்கு குறித்து விளக்கினார். இத்துறை கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது என்று கூறிய அவர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறை 5.5% பங்களிப்பதாக தெரிவித்தார்.
நாட்டில் 53.6 கோடி கால்நடைகள் உள்ளதாகவும், பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், முட்டை உற்பத்தியல் இரண்டாவது இடத்திலும் உள்ளதாக அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால் கால்நடை கணகெடுப்பு குறித்து அடித்தட்டு அளவில் விரிவான பயிற்சி, திறன் மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிப்பதுடன், பால் உற்பத்தியில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். முட்டை உற்பத்தியில் தேசிய அளவில் தமிழ்நாடு முக்கிய பங்குவகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
21-வது கால்நடைக் கணக்கெடுப்பு நமது வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாம், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும் உதவும் என்று கூறினார். கால்நடை கணக்கெடுப்பு பல முக்கியமான தகவல்களை அரசுக்கு வழங்குவதுடன், கொள்கை வகுப்பது, நிதி ஒதுக்கீடு ஆகியவற்றுக்கும் உதவிகரமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இந்த கணக்கெடுப்பில் 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் 1500 மேற்பார்வையாளர்களும், 6700 கணக்கெடுப்பாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக டாக்டர் கோ கோபால் கூறினார்.
மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் புள்ளியில் பிரிவு ஆலோசகர் திரு ஜகத் ஹசாரிகா, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த பயிலரங்கில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன. இந்த கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டிய கால்நடை இனங்கள், அவற்றை அடையாளப்படுத்துவது மற்றும் துல்லியமான புள்ளிவிவரங்களை உருவாக்குவது போன்றவை குறித்து விளக்கப்பட்டது. கால்நடை கணக்கெடுப்பின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு, கைபேசி செயலி மற்றும் மென்பொருள் குறித்தும் செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் மத்திய கால்நடை பராமரிப்பு துறையின் புள்ளியியல் பிரிவின் இயக்குநர் வி.பி. சிங் தனது நன்றியுரையில் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு இந்த ஆண்டு கால்நடை கணக்கெடுப்பு சிறப்பாக வெற்றியடையும் என்றார்.