அமுல்: இந்திய பால் புரட்சியின் பயணம்

Loading

அமுல்: இந்திய பால் புரட்சியின் பயணம்

"50 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் கிராமங்களால் கூட்டாக
நடப்பட்ட மரக்கன்று இப்போது ஒரு அற்புதமான ஆலமரமாக
வளர்ந்துள்ளது. இன்று இந்த பிரம்மாண்டமான ஆலமரத்தின்
கிளைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரந்து விரிந்துள்ளன”
என்று அண்மையில் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல்
கூட்டமைப்பின் (ஜி.சி.எம்.எம்.எஃப்) பொன்விழாவில் பங்கேற்ற
பிரதமர் நரேந்திர மோடி கூறினார். குஜராத் கூட்டுறவு பால்
சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு என்பது உலக புகழ்பெற்ற அமுல்
நிறுவனத்தின கூட்டுறவு அமைப்பாகும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடம் முன்பு, 1946-ம்
ஆண்டில் குஜராத்தின் மையப்பகுதிகளில், ஒரு புரட்சி ஏற்பட்டது.
இது போல்சன் பால் பண்ணையின் நியாயமற்ற வர்த்தக
நடைமுறைகளுக்கான எதிர்ப்பாகத் தொடங்கி, இந்தியாவின் பால்
வர்த்தக சூழலை மாற்றியமைக்கும் ஒரு இயக்கமாக மாறியது.
கைரா மாவட்டத்தின் விவசாயிகள் சர்தார் வல்லபாய் படேலின்
வழிகாட்டுதலின் கீழ் கைரா மாவட்ட கூட்டுறவு பால்
உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் என்ற அமைப்பை
உருவாக்கினர்.
1965 ஆம் ஆண்டில்,தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB)
அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1973 ஆம் ஆண்டில்
இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ்
குரியன் தலைமையில் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல்
கூட்டமைப்பு நிறுவப்பட்டது. விவசாயிகளுக்கு லாபகரமான
வருமானத்தையும், நுகர்வோருக்கு தரமான தயாரிப்புகளையும்
வழங்கும் நோக்கத்துடன் குஜராத்தின் பால் கூட்டுறவு சங்கங்களின்
உச்ச அமைப்பாக ஜி.சி.எம்.எம்.எஃப் உருவானது. குஜராத்தில்
தொடங்கப்பட்ட இந்தப் பால் கூட்டுறவு இயக்கம் இந்தியாவுக்கு
மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வளரும் நாடுகளுக்கும் ஒரு
முன்மாதிரியாக மாறியது.

ரூ. 10 டிரில்லியன் வர்த்தகம் கொண்ட இந்தியாவின் பால்
துறையில் முக்கிய சக்தியாக நாட்டின் பெண்கள் உள்ளனர். இன்று
அமுல் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றிக்கு பெரும்பாலும்
இந்தப் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பே காரணம்.
தற்சார்பு இந்தியாவுக்கான உத்வேகமாக அமுல் திகழ்கிறது. அமுல்
தயாரிப்புகள் உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 18,000-க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு
குழுக்கள் மற்றும் 36,000 விவசாயிகளின் பரந்த கட்டமைப்பின்
ஆதரவுடன், அமுல் ஒரு நாளைக்கு 3.5 கோடி லிட்டருக்கும்
அதிகமான பாலைப் பதப்படுத்துகிறது.
இது மூன்று அடுக்கு கூட்டுறவு அமைப்பாக செயல்படுகிறது. கிராம
அளவிலான பால் சங்கங்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து
பாலைச் சேகரிக்கின்றன. இச்சங்கங்கள் மாவட்ட அளவிலான
ஒன்றியங்களுக்கு பாலை விநியோகம் செய்கின்றன. இறுதியாக,
மாநில அளவிலான பால் கூட்டமைப்புகள் விநியோகத்தை
ஒருங்கிணைத்து பல்வேறு சந்தைகளுக்கு விநியோகிக்கின்றன.
விவசாயிகள் தங்கள் பாலுக்கு நியாயமான விலை பெறுகிறார்கள்.
மேலும் நுகர்வோர் தூய, கலப்படமற்ற பொருட்களைப்
பெறுகிறார்கள். செயல்பாடுகளை பரவலாக்கியிருப்பதன் மூலமும்,
உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவதன் மூலமும், அமுல் ஒரு
நிலையான விநியோகச் சங்கிலியை உறுதி செய்துள்ளது. அத்துடன்,
கிராமப்புறப் பொருளாதாரத்தையும் பலப்படுத்தியுள்ளது.
அமுல் 2022-23-ம் நிதியாண்டில் ரூ. 72,000 கோடி, விற்பனை
வருவாயை பதிவு செய்த இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர்
பொருள் பிராண்டாக உள்ளது. அமுல் உலகளவில் உலகின்
வலுவான பால் பிராண்டாக மட்டுமல்லாமல், உலகளவில்
இரண்டாவது வலுவான உணவு பிராண்டாகவும்
தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

அமுல் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் உத்தியில் சிறந்த
அணுகுமுறை உள்ளது. அமுல் அதன் தயாரிப்புகளுக்கு ஒரு

நிலையான பெயரிடல் நடைமுறையைப் பயன்படுத்துவதன் மூலம்,
சந்தைப்படுத்தல் முயற்சிகளை எளிதாக்கியுள்ளதுடன் செலவு
நிர்வாகத்தையும் நெறிப்படுத்தியுள்ளது. அமுலின் விளம்பரம் மற்றும்
தகவல் தொடர்பு உத்தியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சமூகம் பொதுநல நோக்குடன் ஒன்றிணைந்தால் வெற்றியை
அடைய முடியும் என்பதை அமுல் நிறுவனம் எடுத்துக்
காட்டுகிறது. இன்று, அமுல் என்பது ஒரு தயாரிப்பு மட்டுமல்லாமல்,
ஒரு இயக்கமாகவும் உள்ளது. விவசாயிகளின் பொருளாதார
சுதந்திரத்தை உறுதி செய்துள்ளதுடன், விவசாயிகளின் கனவுகளை
நனவாக்கி அவர்களது நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது.

—————-

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *