பன்முக விளையாட்டுக்களுடன் கூடிய இந்தியாவின் முதலாவது கடற்கரை விளையாட்டுகள்
டையூவில் நடைபெற்ற முதலாவது கடற்கரை விளையாட்டுப் போட்டியில் மத்தியப் பிரதேசம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது
கடற்கரை விளையாட்டு போட்டிகள் 2024 என்ற பன்முக விளையாட்டுக்களுடன் கூடிய இந்தியாவின் முதலாவது கடற்கரை விளையாட்டுகள், டையூவில் உள்ள நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட அழகிய கோக்லா கடற்கரையில் நடைபெற்றது.
போட்டிகளில் மத்தியப் பிரதேச மாநிலம் 7 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம் மத்தியப் பிரதேச மாநில விளையாட்டுக் குழுவின் விளையாட்டுத் திறன் வெளிப்படுத்தப்பட்டது மட்டுமின்றி, அந்த மாநிலத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட திறமையின் ஆழத்தையும் எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
மூன்று தங்கம் உட்பட 14 பதக்கங்களை மகராஷ்டிரா மாநிலம் வென்றது. போட்டிகளை நடத்திய தாத்ரா, நாநகர் ஹவேலி, டையூ & டாமன் மற்றும் தமிழ்நாடு, உத்தரகாண்ட் மாநிலங்கள் தலா 12 பதக்கங்களை வென்றன. 5 தங்கத்துடன் அசாம் மாநிலம் மொத்தமாக 8 பதக்கங்களை வென்றது.
போட்டிகளில் பரபரப்பான திருப்பமாக கடற்கரை கால்பந்து போட்டியில் லட்சத்தீவு தங்கம் வென்றது. இதன் மூலம் அந்த அழகிய தீவுப் பகுதி ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஜனவரி 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 21 வயதுக்குட்பட்ட 1404 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். விளையாட்டு துறையை சேர்ந்த 205 அதிகாரிகள் போட்டிக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
விளையாட்டுப்போட்டிகள் காலை 8 மணிக்குத் தொடங்கி நண்பகல் வரை ஒரு பிரிவாகவும், பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இன்னொரு பிரிவாகவும் நடைபெற்றன. இதனால் தகுந்த வானிலை சூழலில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன் மேம்பட்டது மட்டுமின்றி, உற்சாகமான பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய அனுபவத்தைக் கொடுத்தது.
கயிறு இழுக்கும் போட்டிகளில் உத்தி ரீதியிலான மோதல்கள் முதல் கடல் நீச்சலின் மூச்சடைக்கும் சாதனைகள் வரையும், பென்காக் சிலேட்டின் தற்காப்பு கலை, மல்லாகம்பின் அக்ரோபாட்டிக் காட்சிகள், வேகமான பீச் வாலிபால் போட்டிகள், கடற்கரை கபடியின் உத்திப்பூர்வ மோதல்கள்,
மற்றும் கடற்கரை கால்பந்து போட்டிகளில் மின்னல்வேக உதைகள் மற்றும் இலக்குகள் என ஒவ்வொரு விளையாட்டும் நிகழ்வுக்கு அதன் தனித்துவமான ஆற்றலைக் கொண்டு வந்தது.
கடற்கரை குத்துச்சண்டை போட்டியின் அறிமுகமானது, கூடுதல் உற்சாகத்தை அளித்தது, பங்கேற்பாளர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்தது . இந்தப் போட்டிகள் நாட்டின் தடகளப் பயணத்தில் ஒரு வரலாற்று தருணத்தைக் குறிப்பதாக இருந்தது.
மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இந்த நிகழ்விற்கு உற்சாகத்தையும், ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “விளையாட்டு வீரர்களின் ஆற்றலும், டையூவின் அழகும் இதுவரை இல்லாத உணர்வு அதிர்வுடன் வசீகரிக்கும் மற்றும் உற்சாகமூட்டும் வகையில் பின்னிப் பிணைந்துள்ளன” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் தனது பதிவில், இந்தியாவின் கடற்கரைகளுக்குப் புத்துயிரூட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையானது, குஜராத் கடற்பகுதியில் உள்ள டையூவில் முதல்முறையாக கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ததன் மூலம், விளையாட்டுத்துறை திருப்பத்தைக் கண்டுள்ளது. .
இந்தியா புவியியல் ரீதியாக உலகின் மிக அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 12 கடற்கரைகள், நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கும் தூய்மையான கடற்கரைகளுக்கான நீலக் கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன.
நாட்டின் பல கடற்கரைகளில் அவற்றைச் சார்ந்து இருக்கும் அம்சங்கள் குறித்து ஆராயப்படவில்லை. எனவே டையூ கடற்கரையில் விளையாட்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது.