திருச்சியில் 10 கி.மீ. தூர ஆக்ரமிப்புகளை அகற்றி தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
திருச்சியில் 10 கிலோ மீட்டர் தூர ஆக்கிரமிப்புகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். திருச்சி- புதுக்கோட்டை சாலையில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து மாத்தூர் ரவுண்டானா வரையிலான 10 கிலோமீட்டர் தூரத்தில் 327 இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தது. சுப்ரமணியபுரம், ஜெயில் கார்னர், புதுத்தெரு, செம்பட்டு, குண்டூர், பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்புகள் ஆகியவை என இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இறுதியாக கடந்த மாதம் 4ம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட பொறியாளர் சந்துரு தலைமையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் 25 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்
4 உதவி கோட்டப் பொறியாளர்கள், 10 உதவி பொறியாளர்கள் மேற்பார்வையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காலை முதல் நடைபெற்றது. மேலும் இதில் சுப்ரமணியபுரம் எம்ஜிஆர் நகர், ஜே ஜே நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 166 ஆக்கிரமிப்புகள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக அவற்றை மட்டும் அகற்றவில்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி காரணமாக திருச்சி- புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கே.கே நகர், விமான நிலைய காவல் நிலையங்களின் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி- புதுக்கோட்டை சாலையில் 69 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணி முடிந்து உள்ளது. தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றியதன் மூலம் சாலை விரிவாக்கப் பணி தொடங்கும் என்று பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.