மாரத்தான் ஓட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

Loading

5-வது காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டம்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார்

வாரணாசி, நவ.28

5-வது காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு இன்று, நூற்றுக்கணக்ககான இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டத்தை பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகம் முன்னெடுத்துள்ள காசி தமிழ் சங்கமத்தின் 5-வது பதிப்பு நாளை (சனிக்கிழமை) தொடங்கி டிசம்பர் மாதம் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த சங்கமத்தை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள்.

இதனை முன்னிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்வாக  மாரத்தான் ஓட்டம் வாரணாசியில் நேற்று நடத்தப்பட்டது.  அங்குள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட ‘கே.டி.எஸ் 5.0-க்கான ஓட்டம்’ நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். காலை 7 மணிக்கு மால்வியா பவனில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டம், ரவிதாஸ் கேட்டை அடைந்தது. இந்த ஓட்டத்தின் மூலம், காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான கலாசாரப் பிணைப்புகள் மற்றும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற செய்தியை இளைஞர்கள் வெளிப்படுத்தினர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அஜித்குமார் சதுர்வேதி இந்த ஓட்டத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் உற்சாகத்தைக் கண்டு அவர் நெகிழ்ந்து போனார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான இளைஞர்களைப் பார்த்தது தனக்கு உத்வேகம் அளித்ததாக கூறினார்.

மேலும், “பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு தேசம் போன்றது. இங்கு நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மாணவர்கள் படிக்கின்றனர். பல்வேறு மொழிகள், கலாசாரங்கள் மற்றும் மரபுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு ஒன்றாக வாழ்கின்றனர். காசி தமிழ்ச்சங்கமம், பண்டைய நாகரிகங்கள், ஆன்மிக மரபுகள் மற்றும் இசையின் சங்கமத்தை வெளிப்படுத்தும்” என்றும் அவர் கூறினார்.

காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கலாசார, மொழி மற்றும் ஆன்மிக பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த நிகழ்வு அமைகிறது. இந்த ஆண்டின் சங்கமத்துக்கான கருப்பொருள் “திருக்குறள் பயிற்சி” என்பதாகும். திருக்குறள் என்பது அறநெறி, வாழ்க்கை விழுமியங்கள் மற்றும் நன்னடத்தையை போதிக்கும் ஒரு பழமையான மற்றும் புகழ்பெற்ற தமிழ் நூலாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர் அதை அறம், பொருள், இன்பம் என 3 பகுதிகளாக பிரித்தார். மொழிபெயர்ப்பின் மூலம், இந்த நூலின் கருத்துகளைத் தமிழ் மொழிக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பரப்பும் முயற்சி செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பு அதிகாரி பேராசிரியர் அஞ்சல் ஸ்ரீவஸ்தவா கண்காணித்து ஒருங்கிணைக்கிறார். காசி தமிழ்சங்கம் என்பது வட மற்றும் தென் இந்தியாவுக்ககு இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வு என்று அவர் குறிப்பிட்டார். இது இரு பிராந்தியங்களின் பொதுவான பாரம்பரியத்தை புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

0Shares