திடீர் கடையடைப்பு: ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

Loading

வாடகைக் குறைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஈரோடு அப்துல் கனி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் கடையடைப்பு: ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு நேதாஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 411 கடைகளுடன் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற அப்துல் கனி மார்க்கெட் வணிக வளாக வியாபாரிகள், கடை வாடகையைக் குறைக்க வலியுறுத்தியும் வளாகத்தைச் சுற்றியுள்ள சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக் கோரியும் இன்று திடீர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் மார்க்கெட் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டதுடன், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக வளாகத்திற்கு வெளியே சாலையோரங்களில் வெளிமாவட்ட வியாபாரிகள் தற்காலிகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே வர முடியாமல் தாங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தினசரி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.என். நூர் சேட், வரும் ஜனவரியுடன் முடியவுள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது, ஏற்கனவே உறுதியளித்தபடி சதுர அடிக்கு 73 முதல் 93 ரூபாய் வரை உள்ள தற்போதைய வாடகையை 50 ரூபாயாகக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்றும், கடைகளுக்குக் குடிபெயர்வதற்கு முன்பே கணக்கிடப்பட்ட இரண்டு மாத வாடகையை ரத்து செய்யும் மாமன்றத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பண்டிகைக் காலங்களில் வளாகத்தைச் சுற்றி வெளிமாவட்ட வியாபாரிகள் ஆக்கிரமிப்புக் கடைகள் அமைப்பதைத் தடுத்து நிறுத்தி, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
0Shares