ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Loading

ஈரோட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: கூலி உயர்வு வழங்க வலியுறுத்தல்
ஈரோடு, நவ. 19
நூல் மற்றும் ஜவுளிக் கட்டுகளை ஏற்றி, இறக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, ஈரோட்டில் பல்வேறு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு பார்க் ரோடு, ஸ்டார் தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூல் மற்றும் ஜவுளிக் கட்டுகளை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கான நடைமுறையில் இருந்த கூலி ஒப்பந்தம் கடந்த 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாகவும், 19 மாதங்கள் கடந்தும் கூலி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
கூலி உயர்வு கோரி நூல், ஜவுளி வியாபாரிகள் சங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும், நேரடியாகவும் தொழிலாளர் துறை மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வியாபாரிகள் முன்வரவில்லை எனக் கூறி கண்டனம் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கை தொடர்பாக வரும் நவம்பர் 23-ஆம் தேதி தொழிலாளர் அலுவலர் முன்னிலையில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்ட வேண்டும் என்றும், உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களின் வழக்கமான லாரி அலுவலகங்களில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தமும் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளதால், அந்தப் பிரச்னைக்கும் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் பெரியார் நகர் மனோகரன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, சிஐடியு சுப்பிரமணியம், பாமக பி.வி.ஆறுமுகம், சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் தங்கவேல், எல்பிஎஃப் கோபால், இளையராஜா வேணுகோபால், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
0Shares