கோவையில் நடைபெற்ற கிட்ட அ தான் போட்டி
![]()
கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1350க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, கிட்டத்தான் போட்டி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடைபெற்றது
குழந்தைகளைப் பாதிக்கும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் ஆகியவை இதயங்கள் அறக்கட்டளையுடன் இணைந்து, நான்காவது ஆண்டாக ‘கிட்-அ-தான்’ எனும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்தியது. இதில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1,350-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வை, ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.எஸ்.மாருதி மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ்,ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபொலிஸ் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதனிடம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸின் உறுப்பினர் சேர்க்கைப் பிரிவுத் தலைவர் சூர்வஜித் எஸ். கிருஷ்ணன் கூறுகையில், இதயங்கள் அறக்கட்டளையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி முழுவதும் இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் சர்க்கரை நோய் தடுப்புத் திட்ட இயக்குநரும், கிட்-அ-தான் தலைவருமான ரேஷ்மா ரமேஷ், ரோட்டரி நிர்வாகிகள், மகேஷ் பிரபு, சுஜய் ஷெராஃப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

