நெசவாளர்களுக்கு இந்த வாரமே கூலி உயர்வு
![]()
ஈரோட்டில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்: நெசவாளர்களுக்கு இந்த வாரமே கூலி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் விஜய பாலாஜி பேட்டி!
ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஓடைகளைத் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூய்மைப்படுத்துதல் மற்றும் சாக்கடை, பாதாள சாக்கடைப் பிரச்சனைகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய பாலாஜி, மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்குத் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும், நெசவாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், நெசவாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்த வாரத்திலேயே கூலி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்தார்.

