வியாபாரிகள் யுபிஐ பணப் பரிவர்த்தனையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
![]()
யுபிஐ கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோட்டில் 10,000 வியாபாரிகள் யுபிஐ பணப் பரிவர்த்தனையை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு 0.4 சதவீத கட்டணம் விதித்துள்ள மத்திய அரசின் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் வியாபாரிகள் இன்று ஒருநாள் யுபிஐ பணப் பரிவர்த்தனைகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள இப்புதிய கட்டண விதிப்பிற்கு வியாபாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய இந்த அடையாளப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் யுபிஐ மூலமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகம் முன்பாக மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளைப் பாதிக்கும் இக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

