தேர்தல் வரும், போகும்;உறவுகள் முக்கியம்!ஆ.ஹென்றி
![]()
தேர்தல் வரும், போகும்; உறவுகள் தான் முக்கியம்! மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள்
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழகத்தில் 17வது சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான (2026) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் நாளை (மே 4, 2026, திங்கட்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை வெளியாக உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுதும் இத்தேர்தலின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதத்தை ஒப்பிடக்கையில் இத்தேர்தலில் பதிவான வாக்கு சதவீதம் அதிகம். இதனால் தமிழக அரசியல் கட்சிகளிடையும் மற்றும் பொதுமக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பையும், ஒரு வித பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்பது நிதர்சனம்.
அதற்கு முக்கிய காரணம் இந்த தேர்தலில் விஜய் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றி கழகம் களத்தில் போட்டியிட்டதுதான். அவருக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆதரவு தெரிவித்து களத்திலும் சமூக ஊடகங்களில் வாயிலாகவும் பதிவுகளை வெளியிட்டனர். மேலும் முதல்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர். எனவே நாளை வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நாளை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தமிழக மக்களுக்கான அரசாங்கம் அமையயுள்ளதற்கான முக்கியமான நாள். இச்செய்தி ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் அனைவரிடமும் ஒரு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில் தேர்தல் முடிவுகள் வரும்போது, வெற்றி பெற்ற கட்சித் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள். அதேசமயம், வெற்றி வாய்ப்பை இழந்த கட்சித் தொண்டர்கள் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாவார்கள். இது இயற்கைதான். எனவே அமையப்போகும் அரசாங்கம் தமிழக மக்கள் அனைவருக்குமானது. எனவே, தேர்தல் முடிவை ஒரு போட்டியின் முடிவாக மட்டுமே பார்க்க வேண்டுமேயன்றி பகைமை உணர்ச்சியுடன் தவறான முடிவுகள் மற்றும் வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடாது.
இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இந்த தேர்தலில் புதிய உற்சாகத்துடன் களம் கண்ட விஜய் அவர்களின் கட்சியினை ஆதரித்த இளைஞர்கள், ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல், முடிவுகள் எவ்வாறு வந்தாலும் அதனை மனதளவில் சமநிலையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.
பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் நலன் கருதி இத்தருணத்தில் முக்கிய அறிவுரை கூற விரும்புகிறேன். இந்த தேர்தல் கடந்த தேர்தல்களை ஒப்பிடக்கையில் மிகப்பெரிய அளவில் பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகளிடையே பெரும் தாக்கத்தையும், அரசியல் நிலைப்பாட்டின் போட்டியையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெற்றோர்கள் நாளை வரவுள்ள தேர்தல் முடிவுகளை தங்கள் பிள்ளைகளுடன் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும். ஏனென்றால் இத்தேர்தலில் வெற்றி அவர்களின் மனநிலையை அதிக அளவு உற்சாகத்திற்கு கொண்டு செல்லுமோ, அதேசமயம் தோல்வி மோசமான மனநிலைக்கு கொண்டு சென்று தவறான முடிவுகளுக்கு வழிவகை செய்யும். ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக பேசி, புரிய வைத்து அமைதி படுத்த வேண்டும்…
அதுபோல் அனைத்து கட்சியினரின் தொண்டர்களும் வெற்றியை கொண்டாடுங்கள். அதே சமயம் வெற்றி பெற்றவர்கள் தோல்வியடைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களை கேலி கிண்டல் செய்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள். நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் அரசியல் ரீதியான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மற்றவர்களைப் புண்படுத்தும் விதமாகவோ அல்லது தூண்டிவிடும் வகையிலோ எதையும் பகிர வேண்டாம்.
ஏனென்றால் தேர்தலில் வெற்றித் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. ஆனால் மனித உறவுகள் என்பது விலை மதிக்க முடியாதது என்பதை நினைவு கொள்ளுங்கள். அதுபோல் தோல்வி அடைந்த கட்சியை சேர்ந்தவர்களும் மனம் உடைந்து சோர்ந்து போகாமல் நாளைய வெற்றிக்கான பயணத்தை தொடங்குங்கள்.
மீண்டும் அழுத்தமாக பெற்றோர்களுக்கு இந்த வேண்டுகோளை பதிவு செய்கிறேன். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள். வெற்றி அல்லது தோல்வி என்பது நிரந்தரமல்ல. எனவே அடுத்த கட்ட வெற்றிக்கான பயணத்தை மேற்கொள்ள தொடங்குங்கள் எனவும், தேர்தல் முடிவுகள் மட்டும் வாழ்க்கை அல்ல. நமது கவனம் கல்வி வேலை தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் மீதும் இருக்க வேண்டும் என்பதை அன்பாக விளக்குங்கள்.
தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. ஆனால், நம் வாழ்க்கை அன்றாடமானது. எந்த சூழலிலும் விரக்தி அடைய வேண்டாம். பகைமை வளர்க்க வேண்டாம். தவறான முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதி – சகிப்பு – முன்னேற்றம் இவையே ஜனநாயகத்தின் உண்மையான அடையாளங்கள் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளுங்கள் என அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் பொதுமக்கள், வாக்காளர்கள், தொண்டர்கள் மற்றும் ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் அன்புடன் வேண்டுகோள் வைத்து செய்தி வெளியிட்டுள்ளார்.

