வாக்கு எண்ணிக்கை தொடர்பாகபயிற்சி கூட்டம்
![]()
நசரத்பேட்டையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கான பயிற் சி கூட்டம் :
திருவள்ளூர் ஏப் 30 : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், நசரத்பேட்டை பிரதான சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வருகின்ற 04.05.2026 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கான தேசிய அளவிலான முதன்மை பயிற்றுநர் சார்பாக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமை தாங்கி பேசினார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் கடந்த மார்ச் 23-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்தனர். அதன்படி மொத்தம் 83.65 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதில் ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 17 ஆயிரத்து 908 பேரும் பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 67 ஆயிரத்து 53 பேரும், 3-ஆம் பாலினத்தவர்கள் 267 பேரும் என மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி ஆண் வாக்காளர்கள் 83.34 சதவிகித வாக்குகளும், பெண் வாக்காளர்கள் 83.34 சதவிகித வாக்குகளும்,3-ஆம் பாலினத்தவர்கள் 43.20 சதவிகித வாக்குகளும் என மொத்தம் 83.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எந்நிரங்கள் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல் அடுக்கில் மத்திய காவல் படை, இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாவது அடுக்கில் மாநில காவல் படை என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, உதவி காவல் ஆணையர் தலைமையில் மூன்று ஷிப்டுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 24 மணி நேரமும் செவ்வாப்பேட்டை மற்றும் பெருமாள் பட்டு ஆகிய இரண்டு மையங்களிலும் 320-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முடியும் வரை எவ்வாறு செயல்பட வேண்டும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி செய்திட வேண்டும். அரசியல் கட்சி பிரமுகர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். முடிவுகளை அறிவிக்கும் முன் முழு விவரங்களையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளை வழங்கினார்.
இதில் துணை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டீ.ஸ்ரீராம், 10 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கான மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

