உங்கள் வாக்கு, உங்கள் அதிகாரம் ஆ.ஹென்றி

Loading

உங்கள் வாக்கு, உங்கள் அதிகாரம்!” – 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள்

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி இந்திய ஜனநாயகத்தின் திருவிழா தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றப் பொதுத்தேர்தல்  நாளை (வியாழக்கிழமை, ஏப்ரல் 23) நடைபெற உள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த முக்கிய தருணத்தில், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் எனவும், தேர்தல் என்பது வெறும் விடுமுறை தினம் அல்ல; அது நாட்டின் தலையெழுத்தை மாற்றும் அதிகாரம் நம் கையில் கிடைக்கும் நாள். “எனது ஒரு வாக்கினால் என்ன மாறிவிடப் போகிறது?” என்ற அலட்சியமே தவறான நபர்கள் ஆட்சிக்கு வரக் காரணமாகிறது. 100 சதவீத வாக்குப்பதிவு மட்டுமே ஒரு உண்மையான பலமான அரசை உருவாக்கும் எனவே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தியில்…

தமிழகத்தில் வாக்குரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 5.73 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் அனைவரும் வாக்களிப்பதற்கு வசதியாக சுமார் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளன.  அதில் 5938 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என குறிப்பிட்டுள்ளது

தமிழகத்தில் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கான முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் ஆகியவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கீழ்கண்ட அரசு அங்கீகரித்த 12 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவைகள் ஆதார் கார்டு (Aadhaar Card), வாக்காளர் அடையாள அட்டை (EPIC – Election Photo Identity Card)பாஸ்போர்ட் (Passport)ஓட்டுநர் உரிமம் (Driving License)பான் கார்டு (PAN Card), புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக பாஸ்புக் (Bank/Post Office Passbook with Photo)மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை (Service Identity Cards)சுதந்திரப் போராட்ட வீரர் அடையாள அட்டை (Freedom Fighter Identity Card) , ஆயுத உரிமம் (Arms License)தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கிய ஸ்மார்ட் கார்டு (Smart Card issued by RGI under NPR)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGA) வேலை அட்டை,  மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான புகைப்பட அடையாள அட்டை (UDID Card) ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள சுமார் 300 கம்பெனி துணை ராணுவப் படையினரும் மற்றும் 83,875 காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே மக்கள் அச்சமின்றி தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு வாக்குச்சாவடிக்கு செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் அமைதியாக நடைபெற தமிழகம் முழுவதும் ஏப்.21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

தேர்தலையொட்டி, நகர்ப்புறங்களில் வசிக்கும் வாக்காளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக ஏப்.21 முதல் 23-ம் தேதி வரை 5,574 சிறப்பு பேருந்துகள் உள்பட 10,663 பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

மாநகராட்சி சார்பில் ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனி வரிசை மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் என ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிறப்பு வசதிகள்  செய்யப்பட்டுள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளை   கொண்ட  ஒட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு வசதியாக பல வண்ணங்களில் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் ஒட்டுச்சாவடிகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

இத்தருணத்தில் நோட்டா (NOTA – None of the Above) குறித்தும் பதிவு செய்வது எனது கடமையாக கருதுகிறேன். தங்கள் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால், நீங்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக வாக்கு இயந்திரத்தில் உள்ள நோட்டா (NOTA) பொத்தானை அழுத்தலாம். இதன் மூலம் வேட்பாளர்கள் மீதான உங்கள் அதிருப்தியைப் பதிவு செய்ய உதவும் ஒரு ஜனநாயக ஆயுதமாகும். அதிகப்படியான நோட்டா வாக்குகள் விழுவது, அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். எதிர்காலத்தில் தகுதியான வேட்பாளர்களை நிறுத்த அவை தூண்டப்படும்.

ஜனநாயக கடமை ஆற்ற வாக்களிப்பது என்பது வெறும் உரிமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தார்மீகக் கடமையாகும். நீங்கள் போடும் ஒரு ஓட்டு, வரும் ஐந்து ஆண்டுகால உங்கள் வாழ்வாதாரத்தையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் தீர்மானிக்கும். நமது வாக்கு விற்பனைக்கு அல்ல, விழிப்புணர்வுடன் செலுத்துவோம் நம் வாக்கை!” நாளை அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் செல்வோம்; ஜனநாயகத்தை வலிமைப்படுத்துவோம்! என டாக்டர் ஆ.ஹென்றி தனது தேர்தல் விழிப்புணர்வு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

0Shares