தொடுகாடுபழங்குடியினருக்குவாக்குப்பதிவுவிழிப்புணர்வு
![]()
தொடுகாடு பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் :
திருவள்ளூர் ஏப் 14 : திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்ப்பட்ட கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமையில் பொதுமக்களிடம் தேர்தல் அழைப்பிதழ்களை வீடு வீடாக வழங்கி, பொதுமக்களுடன் செல்ஃபி பூத்தில் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டு, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்களிப்பு நடைபெற வேண்டும். தேர்தலை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இந்த ஜனநாயக பங்களிப்பில் ஒவ்வொரு மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இங்கிருக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் இன்று அழைப்பிதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் உங்கள் பகுதியை சார்ந்த அனைத்து மக்களையும் தவறாமல் வாக்களிக்க செய்ய வேண்டும். தவறாமல் வாக்களித்து திருவள்ளூர் மாவட்டம் 100% வாக்களிப்பு நிறைந்த மாவட்டம் என்ற ஒரு நிலையை அடைய வேண்டும். அதுபோக எந்தவொரு தூண்டுதலுமின்றி உங்களுக்கு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ உங்களது மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.
வேறு எந்த ஒரு தூண்டுதலோ, மற்ற ஒரு ஆட்படுதலோ இல்லாமல் வாக்களிப்பினை செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையினை வைத்து இங்கே மிகச்சிறப்பாக இந்த விழாவினை ஒருங்கிணைத்த துறை தலைவர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊரக வளர்ச்சித்துறை சார்ந்தவர்கள் மற்றும் இங்கிருக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டு இந்த தொடுகாடு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அனைத்து மக்களும் வாக்களித்துவிட்டனர் என்ற ஒரு நிலையை வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று நீங்கள் கொண்டு வர வேண்டும் மாவட்ட தேர்தல் அலுவலர் மு.பிரதாப் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளில் 500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். மேலும் நாட்புற கலைகூத்து, சிலம்பம் மற்றும் மேளதாளங்களுடன் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் (ம) தணிக்கை (மத்தியம்)) கே.எஸ்.யுவராஜ், உதவி இயக்குநர் (பயிற்சி) பி.மோகன், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி(வ.ஊ), நடராஜன்(கி.ஊ) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

