தமிழ் நிலம் ஜியோ-இன்போ செயலியில் இணைக்க வேண்டும்
![]()
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு பதிவுத் துறை தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..
தமிழ்நாடு பதிவுத்துறையின் சேவைகளை பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் ஒற்றை சாளர முறையில் (single window system) ஆவண முன் பதிவுகளை விரைந்தும், எளிமையாகவும், பாதுகாப்பாகவும் பணிகளை இணையதளத்தில் மேற்கொள்ளும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்ட ஸ்டார் 1.0 மென்பொருள் திட்டம் அதனை தொடர்ந்து ஸ்டார் 2.0 மென்பொருள் திட்டம் அதனை தொடர்ந்து தற்பொழுது செயல்பாட்டிற்கு வந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 மென்பொருள் திட்டம் வாயிலாக ஸ்பிரின்ட் 1 (SPRINT 1) திட்டத்தின் மூலம் வீடு, நிலம், மனைகள் தொடர்பான சொத்துக்களை வாங்குபவர்களும், விற்பவர்களும் சார் – பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் (presence less) எங்கிருந்தும் எப்பொழுது வேண்டுமானாலும் பத்திர பதிவினை மேற்கொள்ள முடியும் என்பதுடன், வார இறுதி நாட்கள், விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களிலும் பொதுமக்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஆன்லைன் வாயிலாக பத்திர பதிவினை மேற்கொள்ளும் வகையிலும், காகித பயன்பாட்டினை குறைத்திடும் நோக்கில் காகிதமில்லா இணைய வழியில் ஆவணங்களை சமர்ப்பித்துடும் வகையில் (Paper less Registration), கிரைய பத்திரம் (Sale Deed), பத்திரத்தின் சான்று நகல் (Certified Copy) பெறுதல், வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம் (Sale Agreement), பொது அதிகாரப் பத்திரம் (Power of Attorney), திருமணப் பதிவு மற்றும் சான்றிதழ் பெறுதல், சொத்து வழிகாட்டி மதிப்பு (Guideline Value) கணக்கீடு, ஆன்லைனில் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தல், QR Code மூலம் ஆவணச் சரிபார்ப்பு, ஆவண நிலை கண்காணிப்பு (Document Status Tracking), ஆவணத் திருத்தம் (Rectification Deed), குத்தகை/வாடகை ஒப்பந்தம்/ அடமான கடன் பதிவு மற்றும் மேற்கண்ட பத்திரங்கள் ரத்து (Cancellation of Deeds), உயில் (Will) பதிவு மற்றும் ரத்து, டிஜிட்டல் கையொப்பமிட்ட ஆவணங்கள், குடியிருப்புச் சங்கப் பதிவுகள் மற்றும் முன்பதிவு நேரம் (Online Appointment Booking) உள்ளிட்ட 18 வகையான புதிய சேவைகள் பெற்றிடும் வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும் தமிழக அரசு தொடர்ந்து பதிவுத்துறையின் சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதின் காரணமாக இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறதென்றால் அது மிகையாகாது.
மேற்கண்ட எமது பெயிரா கூட்டமைப்பின் சார்பாக கட்டுமானம், மனை வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களில் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு பயனளிக்கும் திட்டங்களை குறித்து அரசை பாராட்டியும், அதே சமயம் சம்பந்தப்பட்ட திட்டங்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் அம்சங்கள் இருப்பின், அது குறித்து அரசுக்கு சுட்டிகாட்டியும் மற்றும் அவைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாற்று அம்சங்கள் மற்றும் ஆலோசனைகளையும்,
அதுபோல் முந்தைய ஸ்டார் 1.0, மென்பொருள் திட்டம் ஸ்டார் 2.0 மென்பொருள் திட்டம் மற்றும் தற்பொழுது செயல்பாட்டிற்கு வந்துள்ள மேம்படுத்தப்பட்ட ஸ்டார் 3.0 மென்பொருளில் இணைக்க வேண்டிய சேவைகள் மற்றும் மென்பொருளின் செயல் திறனில் உள்ள குறைபாடுகள் குறித்த விபரங்களையும், ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தமிழக அரசிற்கும், சம்பந்தப்பட்ட பதிவுத்துறையின் அதிகாரிகளுக்கும் நேரிலும், கடிதங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாகவும் தொடர்ந்து கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
அந்த வகையில் தமிழக அரசு பதிவுத்துறையின் டிஜிட்டல் சேவைகளின் அடுத்த கட்டமாக பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான அனைத்து விபரங்களையும் கைப்பேசி வாயிலாகவே எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் நிலம் ஜியோ-இன்போ (Tamil Nilam Geo-Info) என்கின்ற ஆண்ட்ராய்டு செயலி கடந்த 21.01.2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தமிழ் நிலம் ஜியோ-இன்போ செயலியின் மூலமாக நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தின் எல்லை விவரங்கள், சர்வே எண், பட்டா விவரங்கள், பரப்பளவு உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் இந்த செயலி மூலம் துல்லியமாகவும், சரியாகவும் அறிந்து கொள்ள முடிவதுடன், எல்லைக் குழப்பங்கள் மற்றும் போலி ஆவண பதிவுகள் நடைபெறுவதை தடுத்திடும் வகையில் பேருதவியாக உள்ளது. மேலும் மேற்கண்ட செயலி மூலம் கிடைக்கப்பெறும் நிலம் தொடர்பான தகவல்கள் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் உள்ளன என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
ரியல் எஸ்டேட் துறையினர் தங்களது நிலங்களில் மனை பிரிவுகளை ஏற்படுத்தும் போது நிலங்களை அளந்து பல அளவுகளில் மனைகளை பிரித்து, பிரிக்கப்பட்ட மனைகளின் எல்லைகளை வரையறுத்துக் காட்டும் வகையில் மனைகளின் நான்கு பக்கங்களிலும் நில அளவை எல்லை கற்கள் நடுவது வழக்கம். வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளில் உருவாக்கப்படும் மனை பிரிவுகளில் பெரும்பளான மனைகளில் வீடுகள் கட்டபட்டு மக்கள் குடியேறுவதினால் சம்பந்தப்பட்ட மனைப்பிரிவுகளில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதின் காரணமாக காலியாக உள்ள மனைகளில் நடப்பட்டுள்ள நில எல்லை அளவைக் கற்கள் தெளிவாக காண முடிகின்றது.
அதேசமயம் பொதுமக்கள் தங்களது எதிர்கால பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை கணக்கில் கொண்டு முதலீடாக எவ்வித வளர்ச்சியும் அடையாத கிராமப்புற பகுதிகளில் வாங்கப்படும் மனைப்பிரிவுகளில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்.
இப்படி மேற்கண்ட வகையில் 100 ஏக்கர் அல்லது அதற்கு மேலும் உருவாக்கப்படும் மனை பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமல் காலப்போக்கில் மனைகளில் செடி, கொடிகள் என வளர்ந்து நான்கு மூலைகளிலும் நடப்பட்ட நில அளவை எல்லை கற்கள் வெளியில் தெரியாத அளவிற்கு புதர்களால் சூழப்பட்டு மறைந்து போகும் சூழல் உருவாகின்றன. இதனால் மனைகளை வாங்கிய உரிமையாளர்கள் எதிர்காலத்தில் தங்களது மனையினை கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மேற்கண்ட மனை பிரிவை முழுவதுமாக சுத்தப்படுத்தினால் மட்டுமே அவர்களுக்குண்டான மனையை அடையாளம் காண முடியும்.
எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெங்களூர் மாநகரத்தில் உருவாக்கப்படும் மனை பிரிவுகளில் மேற்கண்ட வகையில் பராமரிப்பு இனங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி மனைகளின் நான்கு பக்கமும் நடப்படும் நில அளவை எல்லை கற்களில் (GEO TAGGING) நிலக் குறியீடு மற்றும் அட்சரேகை (Latitude) மற்றும் தீர்க்க ரேகை (Longitude) குறியீடுகளை GPS தொழில்நுட்பத்துடன் (GIS) புவியியல் தகவல் அமைப்புடன் இணைத்து வருவதன் மூலம் எளிதாக சம்பந்தப்பட்ட மனைகளை அடையாளம் காண முடிகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மனையின் உரிமையாளர்கள் அவர்களின் மனைகளை மாத்திரம் பராமரித்து பாதுகாக்க மிகவும் உதவிகரமாக உள்ளது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய பதிவுத்துறை தலைவர் அவர்கள் மேற்கண்ட தகவல்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு தமிழ் நிலம் ஜியோ-இன்போ செயலியில் மேற்கண்ட சேவையை இணைத்து அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்றிடும் வகையில் உரிய வழிவகை செய்ய வேண்டுமென பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி பதிவுத்துறை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்

