அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
![]()
திருவள்ளூரில் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா நேரில் ஆதரவு :
திருவள்ளூர் பிப் 12 : காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மற்றும் காலமறை ஊதியம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர் களுக்கு இளநிலை உதவியாளருக்கு நிகரான ஊதியமும், சமையல் உதவியாளருக்கு அலுவலக உதவியாளர் நிலையினான ஊதியம் என காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணி முடிந்து தகுதியான சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியில் அமர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் புங்கத்தூர் தேவா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேபிஎம் எழிலரசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.நேசன், பூண்டி ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, 2021 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 313-ன்படி கால முறை ஊதியத்தை உடனடியாக வழங்காமல் கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றி வருவதால் இது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது இடைக்கால பட்ஜெட் விவாதத்தின்போது இது குறித்து பேசி நிறைவேற்றுவோம் என்றும், திமுக அரசு தோல்வி அடைந்த அரசாக இருப்பதால் தற்போது வருவாய்த்துறை ஊழியர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் 2026 தேர்தலுக்குப் பிறகு விடியா திமுக அரசு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து மக்களின் கோரிக்கைகளை அதிமுகவின் எடப்பாடி தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்றும் முன்னாள் அமைச்சர் பிவி.ரமணா உறுதி அளித்தார்.

